புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் கிறிஸதவ மத அலுவல்கள் திணைக்களம் கிறிஸ்தவ கலைஞர்களுக்கு வழங்கும் தேசிய ரீதியான ‘தர்ம பிரபாஷ்வர’ விருதினை மட்டக்களப்பு, அம்பாறை மறைமாவட்டத்திலிருந்து இம்முறை கவிஞர்.வி.மைக்கல் கொலின் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கடந்த 15.12.2025 திங்கள் கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகர்த்த சரவதேச மண்டபத்தில் நடைபெற்ற விருது விழாவில் இவ் விருது வழங்கி வைக்கப்பட்டது.
மகுடம் பதிப்பக இயக்குனரான கவிஞர் வி.மைக்கல் கொலின் இவ் வருடம் பெற்ற மூன்றாவது விருது இதுவாகும். இம் மாத நடுப்பகுதியில்
மகுடம் பதிப்பகத்தின் நூறாவது வெளியீட்டில் தென்னிந்தியக் கவிஞர்
வித்தியாசாகரின் கல்வி இலக்கிய கலாசார பண்பாட்டு கலை மன்றத்தின் சார்பில்
கவிஞர் வித்தியாசாகர் வழங்கிய பதிப்புச் செம்மல் விருதும்
கடந்த பத்தாம் மாதம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கிய கிழக்கு மாகாணத்தின் அதி உயர் விருதான ‘வித்தகர் விருதையும்’
பெற்றிருந்தார்.
கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக கலை இலக்கியத்துறையில் இயங்கிவரும் வி.மைக்கல் கொலின் இதுவரை ஆறு கவிதை நூல்களையும், ஒரு சிறுகதைத்தொகுப்பையும், ஒரு நாவலையும் வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்ற இவரது ‘பரசுராமபூமி ‘சிறுகதை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘அமேசன்’ வெளியீடாக அண்மையில் வெளிவந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை பேசும் முதல் நாவலான ‘வீணையடி நீ
எனக்கு ‘ தேசிய மற்றும் கொடகே சாகித்திய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட
மூன்று நூல்களில் ஒன்றாக விருது பெற்றிருந்தது.
இவரது கவிதை நூல்கள் இந்திய திருப்பூர் இலக்கிய விருது, மற்றும் இலங்கை, இலண்டன் இலக்கிய நிறுவக விருதுகளையும் பெற்றுள்ளது.
இவரது கவிதைகள், சிறுகதைகள் சிங்கள, மற்றும் ஆங்கில மொழிகளில்
மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதும் இவரது நாவல் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.





