கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை மழை. தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு .

 


கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை மழை கிடைக்கும் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் மலையக மக்கள் நிலச்சரிவு தொடர்பில் மிக மிக எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருப்பது அவசியமானதாகும் என யாழ். பல்கலைக்கழக புவியற்திறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்

அவர் இன்று இரவு வெளியிட்டகுறிப்பில் மேலும் தெரிவிக்கையில், 

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக  உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்கு தென்மேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது. 

இதன் நகர்வு வேகம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளது. இதன் நகர்வு வேகம் குறைவென்பதால் அது  மழைவீழ்ச்சி நாட்களை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற தன்மையும் நீடிக்கின்றது.

இதன் காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை,  பொலன்னறுவை, அனுராதபுரம், இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாளை முதல் வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதாலும், கனமழை கிடைத்து மண் முழு ஈரக் கொள்ளளவை எட்டியுள்ளதாலும்., கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தெம்ப போன்ற நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாலும், மகாவலி, மாதுறு ஓயா, கல்லோயா, போன்ற ஆறுகள் அவற்றின் முழுக்கொள்ளளவோடு பாய்வதாலும், 

காற்றுச்சுழற்சி இலங்கைக்கு தெற்கு தென்மேற்கு திசையில் நிலை கொண்டிருப்பதனாலும், இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல உறுதியற்ற தன்மையினாலும், குறிப்பாக இரத்தினபுரிக்கும் மாத்தறைக்கும் இடையிலேயே இரண்டு மில்லிபார் அமுக்க வேறுபாடு உள்ளமையினாலும்... ... 

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் கனமழையோடு இணைந்த நிலச்சரிவு அனர்த்தங்களுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. 

எனவே  மலையக உறவுகள் நிலச்சரிவு தொடர்பில் மிக மிக எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருப்பது அவசியமானதாகும். எனவே மலையக உறவுகள் நிலச்சரிவு தொடர்பில் மிக மிக எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருப்பது அவசியமானதாகும்.