கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகாமையில் இன்று மண்சரிவு ,ஒருவர் காயம் 3 வீடுகள் சேதம் .

 




கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகாமையில் இன்று  இடம்பெற்ற மண்சரிவினால் ஒருவர் காயமடைந்துள்ளதோடு 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தப் பிரதேசத்தில் நிலவிய மழையுடன் இன்று காலை இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்ணுக்குள் சிக்கியோரை உள்ளூர்வாசிகள் மீட்டனர். அதன்பின் இருவர் உடுதும்பர மருத்துவமனையிலும் ஒருவர் கண்டி தேசிய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். 

 நிலவும் அபாய நிலை காரணமாக, அருகிலிருந்த 2 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த 90 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி - கம்பளை, துனுகேஉல்ல சாலை, அமுஹேன பல்லேகம பகுதியில் உள்ள சாலையில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் வசித்த ஐந்து குடும்பங்கள் வீடுகளை கைவிட்டு வெளியேறியுள்ளன

இதேவேளை நிலவெடிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி வத்தேகம கபரகல வீதி பின்னர் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்தபோதும் நேற்று முதல் (17) பெய்துவருகின்ற கடும் மழைகாரணமாக மீண்டும் இன்று (18) குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வத்தேகம - கபரகலை மற்றும் வத்தேகம ஊடாக - கோமரை, பம்பரல்லை, பெத்தேகமை போன்ற பிரதேசங்களுக்கான போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மாற்று வழிப்பாதைகளை இப்போக்குவரத்திற்காக பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளை அறிவுறுத்துகின்றது.