நீதிமன்றம் அதிரடி உத்தரவு... முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனவரி 09 வரை விளக்கமறியல்:

 

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தலைவரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
​கடந்த 2001 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த ‘மாகந்துரே மதுஷ்’ என்பவரிடமிருந்து மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வெலிவேரிய பகுதியில் குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது டக்ளஸ் தேவானந்தாவுக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
தடுப்புக்காவல் விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று கம்பஹா மேலதிக நீதவான் பத்மா அமரதுங்க முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, பொலிஸாரின் மேலதிக விசாரணைகளைக் கருத்திற்கொண்டு, அவரை எதிர்வரும் ஜனவரி 09 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.