காட்டு யானைகளின் அட்டகாசம் முடிவுக்கு வருவது எப்போது ?

 

 





கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு அணைக்கட்டுப் பகுதிக்குள்  இன்று அதிகாலையில்  புகுந்த காட்டு யானை ஒன்று, வீடுகளுக்கும் பொது இடங்களுக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உடைமைகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாலையில் பேராறு அணைக்கட்டுப் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த யானை, பல இலட்சம் பெறுமதியான பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளது.

குறித்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை சுமார் பத்து மீற்றர் தூரம் இழுத்துச் சென்று அடித்து நொறுக்கியுள்ளது.

தடுப்புச் சுவர்கள், வீட்டு கேட் மற்றும் தென்னை, வாழை, மாமரம் உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கும் யானை சேதம் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன்,  பேராறு சிறுவர் பூங்காவின் தடுப்பு வெளிகளையும் யானை அடித்துச் சேதப்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர் .

பேராறு பகுதியிலிருந்து வன விலங்கு காரியாலயம் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மட்டுமே அமைந்திருந்த போதிலும், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட அதிகாரிகள் தவறிவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், சேதங்களை மதிப்பிடவும் வன விலங்கு திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கந்தளாய் பேராறு அணைக்கட்டுப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்