பௌத்த மதகுருமார்களின் அதிகாரத்தை எவரும் சவால் செய்யக்கூடாது - பொதுபல சேனா கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையான எச்சரிக்கை

 

 


திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில், பௌத்த மதகுருமார்களின் அதிகாரத்தை எவரும் சவால் செய்யக்கூடாது என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட ஞானசார தேரர், இலங்கையிலும் உலக அளவிலும் பௌத்தம் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான இடைவிடாத வரலாற்றைக் கொண்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

எனினும், அரசாங்கங்கள் தற்காலிகமாக ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே சேவை செய்து பின்னர் மாற்றப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், "பௌத்த தொல்பொருளா அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பா முதலில் இந்த நாட்டிற்கு வந்தது என்பதைப் பற்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம், பௌத்த தொன்மையைச் சவால் செய்ய முயற்சிப்பது தேசிய நல்லிணக்கத்துக்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.