மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை வழுப்படுத்து நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின் பங்கேற்புடன் இன்று (18) திகதி பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்சனி கணேசலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
324 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதியின் திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ணசேகர, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுடன், எண்டோஸ்கோபி பிரிவும் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் என வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ் வைத்தியசாலையின் குறைபாடாக திகழ்ந்து வரும்
MRI பிரிவு எதிர்வரும் தை மாதம் அளவில் திறந்து வைக்கப்படுமெனவும்,
சுகாதார துறைசார்ந்த 17 பாரிய திட்டங்களுக்கான அனுமதியினை கடந்த அமைச்சரவை அமர்வில் சமர்பித்து அவற்றிற்கும் நாம் அனுமதியினை பெற்றுள்ளோம் அவற்றின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் கட்டட குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்து விடையங்களையும் நாம் பூர்த்தி செய்துதருவோம் எனவும் இதன் போது அமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
நிகழ்வின் இறுதியில் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.