கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்கள் அங்கிருந்த இளைஞர்கள் குழுவால் மீட்கப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலி கோட்டையில் ஒல்லாந்தர் கட்டிடத்தின் பின்னால் உள்ள பாறைக்கு காதலர்கள் இருவர் நேற்று மாலை சென்றிருந்தனர்.
திடீரென அங்கு கடல் அலை உயர்ந்ததால் பாறைக்கு அருகிலிருந்த காதலர்கள் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.
காதலர்கள் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதை ஒல்லாந்தர் கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரி காமினி அவதானித்து உடனே கடலில் குதித்தித்துள்ளார்.
அதன்பின்னர், ஓல்லாந்தர் கட்டடத்திற்கு அருகிலுள்ள சுற்றுலா உணவகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது.
குறிப்பிட்ட நேரப் போராட்டத்தின் பின்னர் அந்த இளைஞர் குழு காதலர்களான இருவரையும் மீட்டு காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
விபத்தில் சிக்கிய பெண்ணும் இளைஞனும் அஹங்கம மற்றும் லனுமோதரவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அதே வேளையில் இளைஞனும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்கள் இருவரையும் இளைஞர்கள் குழு மீட்ட காட்சி தற்போது காணொளியாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





