காரைதீவு விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

 








காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி எதிர்வரும்  16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நேற்று(13) புதன்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் ,கல்லூரி அதிபருமான ம.சுந்தரராஜன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகரும், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பு கல்லூரி மண்டபத்தில் நேற்று(13) புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இச் சந்திப்பில் பழைய மாணவர் மன்ற பதில் பொருளாளர் வி.குகனேந்திரராஜா, உப செயலாளர் எஸ்.டனிஸ்காந்த் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..

கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற  இம் மாபெரும் பவளவிழா நடைபவனியில் 51 வருட மாணவர் அணியினர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் சகிதம் தனித்துவமான சீருடையுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளரும் பழைய மாணவருமான எஸ்.
புவனேந்திரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் கலந்து கொள்வார்.
நட்சத்திர அதிதிகளாக கல்லூரியில் பயின்று இன்று உயர்நிலையில் இருக்கின்ற பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் 

சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு பவளவிழா நடைபவனி மைதானத்தில் இருந்து ஆரம்பமாகும்.
 
விபுலானந்தாவில் கடந்த காலங்களில் கல்விகற்ற பழைய மாணவர்களின் Batch பிரதிநிதிகளினுடனான பல கூட்டங்களை நடாத்தி இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். கல்வித் திணைக்களம் முதல் பொலிஸார் பாதுகாப்பு படையினர் வரை அனுமதி பெற்று சட்டதிட்டங்களுக்கு அமைவாக இப்பேரணி நடாத்தப்படும்.

பவளவிழா நடைபவனியானது காரைதீவு விபுலானந்தா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி கொம்புச்சந்தி மத்திய வீதியூடாக  மின்மாற்றி சந்தியூடாக நேரு வாசிகசாலை சந்தியைஅடைந்து பின்னர் மேற்கு வீதியூடாக தேசிகர் வீதியையடைந்து தேசிகர் வீதியூடாக காரைதீவு தென்கோடியில் உள்ள வெட்டுவாய்க்கால் வீதியை அடைந்து நேராக பிரதான வீதியை அடையும். அங்கிருந்து கல்முனை நோக்கிய பிரதான வீதியில் பயணித்து காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயச் சந்தியூடாக திரும்பி மத்திய வீதியூடாக கொம்புச் சந்தியை அடைந்து மீண்டும் கல்லூரியை அடையும்.

கலந்து கொள்ளும் 51 அணிகளில் சிறந்த ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய பத்து நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் முதல் மூன்று அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே சகல விபுலானந்தியன்ஸ்களும் கட்டாயம் இந் நடைபவனியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். இது பகிரங்கமான திறந்த வேண்டுகோளாகும் என்றனர்.
 
 (காரைதீவு சகா)