கூலி’ படம் - 100 பாட்ஷா படத்திற்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா.

 


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் – அவர் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தை விட 100 மடங்கு இருக்கும் என அப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் நாகார்ஜுனா தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி, எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியாகும் திரைப்படம் ‘கூலி’. சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- பொலிவுட் நட்சத்திர நடிகர் அமீர்கான் – தெலுங்கு நட்சத்திர நடிகர் நாகார்ஜுனா – கன்னட நட்சத்திர நடிகர் உபேந்திரா – மலையாள நட்சத்திர நடிகர் சௌபின் சாஹிர் – ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் வாரிசும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் என இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்திருப்பதாலும் தொடர்ந்து வசூல் ரீதியான வெற்றி படங்களை வழங்கி வழங்கி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி இருப்பதாலும் இந்தப் படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதீதமாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதன் காணொளி சன் தொலைக்காட்சியின் டிஜிட்டல் தள பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்டது.  இந்நிகழ்வில் பங்கு பற்றிய நடிகர் நாகார்ஜுனா பேசுகையில், ” சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் – அவர் நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தின் 100 மடங்குக்குச்சமம்” என தெரிவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்திருக்கிறார்.