கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக ஈழத்தமிழர் கௌரவ ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார் .

 


கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் ஈழத்தமிழர் கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு வாழ்த்துகள்!
கனேடிய பிரதமராக மார்க் கார்னி அவர்கள் பதவியேற்று தேர்தலுக்கு முன்னரான இடைக்கால அமைச்சரவையில் கனடாவின் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபரராகவும் நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு தேர்தலின் பின் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் கூடுதல் பொறுப்புகளை உள்ளடக்கிய மிக முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் ஒன்றான பொதுப் பாதுகாப்பு அமைச்சு வழங்கப் பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களையும் புலனாய்வுத் துறை, இன்று அமெரிக்கா தனது சர்வதேச வர்த்தக மீளாய்வில் உபயோகப்படுத்தும் ஆயுதமான எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடையங்களை கையாளும் பொறுப்பை கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஏற்கிறார்.
ஈழத்தமிழர்கள் எங்கு சென்றாலும் அனைத்து சமூகங்களையும் புரிந்துகொண்டு அரவணைத்து பயணிக்கும் பண்பை உடையவர்கள் என்பதற்கு ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் வளர்ச்சி உதாரணமாகும். தொடர்ச்சியாக நான்காவது தடவையாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஒவ்வொரு தடவையின் தனது வெற்றியை தீர்மானிக்கும் வாக்கு வீதத்தை தனது தொகுதியில் அதிகரித்து வந்திருந்தமையும் கடந்த தேர்தலில் அதி உச்ச வாக்குவீதங்களில் பெறப்பட்ட வெற்றிகளில் அவரது வெற்றியும் ஒன்றாக இருப்பது அனைத்து சமூகங்களுக்கும் மதிப்பளித்து பாரபட்சமற்று பயணிக்கும் அவரது பண்பை பறைசாற்றுகிறது.
தொடர்ச்சியான நிராகரிப்புகள், போர் தந்த வலிகளால் கடல்கடந்து நாடோடிகளாக பயணித்த ஈழத்தமிழர்கள் செல்லுமிடமெல்லாம் வரலாறு படைப்பது கூட நமது இத்தனை கால இருப்பின் அடிப்படைகளை மீள நினைவுறுத்துகிறது.
பெரிய இலக்குகளை அடைவதற்கும் ஏராளமான வழிகள் இருக்கின்றன. அந்த வழிகளை சரியாக கண்டுபிடித்து பயணித்துக்கொண்டிப்பது சவாலானது என்றாலும் சாத்தியமானதே!
இன்றைய பதவியேற்பு வைபவத்தின் போது உரையாற்றிய பூர்வீகக்குடியை சேர்ந்த பெண்மணி "கழுகுப்பார்வை" யை உதாரணப்படுத்தி பேசியிருந்தார்.
அவ்வாறான பார்வையுடன் கூடிய புரிதலுடன் ஒவ்வொருவரும் பயணிக்க ஆரம்பித்தால் பல கனவுகள் நிஜமாகும்!