ஒன்பது நாட்களில் வற்றாப்பளையில் யாழ். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர்!

 





யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமான யாழ்- கதிர்காமம் பாதயாத்திரை ஒன்பது நாட்களில் இன்று (9) வெள்ளிக்கிழமை காலை வரலாற்று பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் அரோஹரா கோசத்துடன் உணர்வு பூர்வமாக கடந்த 01ஆம் திகதி  வியாழக்கிழமை விசேட பூஜையுடன் ஆரம்பமானது.

26 வது வருடமாக இவ் வருடம்
காலநிலை மாறுபாடுகளுக்கு மத்தியில், வழமைக்கு மாறாக இம்முறை முதல் நாளில் நூற்று இருபதுக்கு அதிகமாக அடியார்கள் பங்கேற்றுள்ளனர்.

எனினும் இயக்கச்சி தொடக்கம் புதுக்குடியிருப்பு வரை நிலவிய மாறுபட்ட காலநிலை காரணமாக சுமார் 60 யாத்திரீகர்கள் காய்ச்சல் தடிமன் நோயினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

இருந்தும் பயணத்தை விடாமல் தொடர்ந்து முருகன் அருளால் வற்றாப்பளையை வந்தடைந்துள்ளோம்.

தற்போது யாருக்கும் உபாதை இல்லை. அனைவரும் சுகமாக உள்ளனர்.
மருத்துவ உதவி தற்போது தேவைப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் ஜெயா வேல்சாமி வற்றாப்பளையிலிருந்து தெரிவித்தார்.

நாளை காலை பாதயாத்திரை மீண்டும் ஆரம்பமாகும். மேலதிகமாக பக்தர்கள் இங்கு இணைந்து கொள்வார்கள்.
 
 ( வி.ரி. சகாதேவராஜா)