150 ஆவது ஆண்டுவிழா கொண்டாடும் மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்


 











































150 ஆவது ஆண்டுவிழா கொண்டாடும் மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

மட்டக்களப்பு பெரு நிலப்பரப்பில் பெயர் சொல்லக்கூடிய ஒரு கல்விச் சாலையாக திகழும் மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் இன்று 150 வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே குறிப்பிட்டளவான கல்விச் சாலைகளே நூற்றாண்டினை தாண்டிப் பயணிக்கும் நிலையில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் 150 வது ஆண்டினை எட்டிப் பிடித்திருப்பது பெரும் சாதனை என்றுதான் கூற வேண்டும்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியே கல்வியும் செல்வமும் தமிழர் பண்பாடும் கலந்து பண்பட்டவர்கள் வாழும் புதுக்குடியிருப்பு பேரூரின் அறிவுச் சாலையாக கண்ணகி மகா வித்தியாலயம் அளப் பெரும் கல்விப் பணியாற்றி இன்றும் தடம் மாறாமல் தரணி போற்ற பயணித்துக்கொண்டிருக்கிறது.

1875 ம் ஆண்டு புதுக்குடியிருப்பில் வாழ்ந்த பெரியோரின் உயரிய சிந்தனையில் புதுக்குடியிருப்பில் அறிவு மிகு சமுகத்தின் உருவாக்கத்திற்கான அஸ்திவாரமாய் ஆரம்பிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் பின் வந்த காலத்தில் புதுக்குடியிருப்பு கிராமத்திலும் அதனருகில் இருக்கின்ற அயல் கிராமங்களிலும்  கல்வி புரட்சியினை செய்தது என்றுதான் கூற வேண்டும். இன்று 15 தசாப்தங்களை கடந்து பண்பட்ட கல்விச் சமூகத்தின் எழுச்சியால் பெரு விருட்சமாகி நிற்கிறது வித்தியாலயம்.

1875 ம் ஆண்டு சிறு கொட்டகைகளில் ஆரம்பிக்கப்பட்ட வித்தியாலயம் பிற்பட்ட காலத்தில் படிப்படியான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து இன்று பல வளங்களை கொண்டு காணப்படும் மட்டக்களப்பின் பெரும் கல்விச் சாலைகளில் ஒன்றாக திகழ்கிறது எனலாம். வித்தியாலய வரலாற்றில் 1967 ம் ஆண்டு க.பொ.த சாதாரண பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பின் 1997ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்காண மாணவர்களுக்கு அறிவு புகட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது. உயர்தர பிரிவில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுடன் இயங்கி வந்த வித்தியாலயத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக கணித விஞ்ஞானப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் பல கல்வி மான்களையும் புத்தியீவிகளையும் கலைஞர்களையும் விளையாட்டு வீரர்களையும் பிரசவித்து இலங்கைத் தீவில் தனது பெயரை பதித்துள்ளது இப் பாடசாலையில் கல்வி கற்றோர் நாட்டின் பல பாகங்களிலும் அரச துறைகளின் பல பிரிவுகளிலும் பல உயர் நிலைகளிலும் தமது சேவையினை புரிந்து கொண்டிருக்கின்றனர். பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்றும் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர் வித்தியாலயத்தில்.

புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து வித்தியாலய கல்விச் சமூகத்துடன் இணைந்து 150 வது ஆண்டு நிறைவை பெரு விழாவாக கடந்த சில மாதங்களாக பல தரப்பட்ட நினைவு நிகழ்வுகளுடன் வெகு சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக 150 வது ஆண்டு நிறைவுக்காக 150 நிகழ்வுகளை  நடத்திக்கொண்டிருக்கின்றனர் இலங்கை மட்டுமல்ல இந்தியாவிலிருக்கின்ற சில கல்விச் சமுகத்துடன் ஒன்றிணைந்தும் நூல் வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து சாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 150 வது ஆண்டு நிறைவை கொண்டாட அவர்கள் பல வருடங்களுக்கு முன்னரே தயாராகி சிறந்த திட்டமிடலுடன் நிகழ்வை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளமை மேற்படி நிகழ்வு ஒன்றே எடுத்துக்காட்டு.

150 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஓர் அம்சமாக பிரமாண்ட நடை பவனி ஒன்றினை கண்ணகி உலா எனும் நாமத்துடன் பலரும் வியர்ந்து பார்க்குமளவுக்கு மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே இன்று ஞாயிற்றுக்கிழமை ( 11)  முன்னெடுத்திருந்தனர்.  இந்த நடைபவனியானது வித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பிரதாய பூர்வ நிகழ்வுகள் பலவற்றுடன் ஆரம்பமானது. வித்தியாலயத்திற்கு முன்னால் நிறுவப்பட்ட முத்தமிழ் வித்தகரின் உருவச் சிலை திறப்புடனும் 150 வது ஆண்டை கொண்டாடும் நினைவுப் பதாதை திறப்புடனும் ஆரம்பமானது. இந்த பேரனி ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான மதிப்பிற்குரிய க . கரிகரராஜ் ஐயா மற்றும் மதிப்பிற்குரிய  ந. குகதாசன் ஐயா ஆகியோரும் கலந்து கொண்டதுடன் இன்னும் பல கல்வி அதிகாரிகளும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் வித்தியாலய கல்விச் சமூகத்தினர் என பல நூற்றுக்கணக்கானோர்  கலந்து சிறப்பித்தனர்.

பிரமாண்டமாக ஆரம்பமான இந்த நடை பவனியில் பழைய மாணவர்களின் ஏற்ப்பாட்டில் பல ஊர்திகள் விழிப்புணர்வுக்காகவும்  புதுக்குடியிருப்பின் பண்பாட்டு கலாச்சாரங்களை பிரதிபலிக்கின்ற வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நடை பவனியினை பல நூற்றுக்கணக்கான பழைய மாணவர்கள் ஆடல் பாடலென அட்டகாசமாக முன்னெடுத்துச் சென்றனர். இவ் ஊர்திகள் நேர்த்தியாகவும் அழகுறவும் வடிவமைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் பல இலட்சம் ரூபாய்கள் செலவில் பாடசாலை அபிவிருத்தி சார்ந்த பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வித்தியாலய சூழலை மாற்றியமைத்திருந்ததை பாடசாலை வெளிப்புற மற்றும் உட்புறச் சூழலை அவதானிக்கும் போது காண முடிந்தது. மட்டு கல்முனை பிரதான வீதியால் பயணிக்கும் போது வித்தியாலயத்திற்கு முன்னால் 150 ஆண்டு நினைவு நாளை கணக்கிடுகின்ற எண்ணிக்கையினை தினமும் காட்சிப்படுத்தியதை அவதானித்துச் செல்வோம் அவர்கள் இந்த பெரு விழாவுக்காக ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டு தங்களை தயார்படுத்தி இருப்பதை இன்றைய நிகழ்வுகளுக்கூடாக காண முடிந்தது.