சர்வதேச புத்தக தினமான ஏப்ரல் 23 அன்று வாழைச்சேனையைச் சேர்ந்த கவிதாயினி
சுஜி பொற்செல்வி அவர்களின் அகமடல் மற்றும் பிரிவுழி ஆகிய இரு கவிதைத்
தொகுப்புகள் பேத்தாழை பொது நூலக விபுலானந்தர் வாசகர் வட்டத்தினரால்
வெளியீடு செய்துவைக்கப்பட்டன.
பேத்தாழை பொது நூலகத்தின் பொறுப்பாளர்
ம.பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்
கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சு.ராஜ்கீதன் கலந்து
சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாகத் தென்னிந்தியாவில் இருந்து வருகைதந்த
அகில உலகத் தமிழ்க் கவிஞர்கள் அறக்கட்டளையினுடைய நிறுவனர் எழுத்தாளர்
சௌ.நாகநாதன், அவ்வமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் ப.மதிபாலசிங்கம்,
கல்குடா கல்வி வலயத்தின் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் (விஞ்ஞானம்)
த.தர்மபாலன், சுகாதாரத் திணைக்கள ஓய்வுநிலை பிரதம முகாமைத்துவ உதவியாளர்
ஜே.எச்.இரத்தினராஜா மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபையின் நிதி உதவியாளர்
சி.ஜெயரூபன் ஆகியோரும் நூலாசிரியரின் உறவிளர்கள் மற்றும் விபுலாநந்தர்
வாசகர் வட்ட உறுப்பினர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து
சிறப்பித்திருந்தனர்.
அகமடல் நூலிற்கான நயவுரையினை எழுத்தாளர் நாகநாதன் நிகழ்த்தியிருந்ததுடன், பிரிவுழி நூலிற்கான நயவுரையினை வளர்ந்துவரும் இளம்கவிஞர் தமிழ்க்கீரன் ஷர்மிதன் நிகழ்த்தியிருந்தார்.
சர்வதேச
புத்தக தினத்தை முன்னிட்டு கவிஞர் சுஜி பொற்செல்வி அவர்கள் தொடர்ந்து
மூன்று வருடங்களாக விபுலாநந்தர் வாசகர் வட்டத்தின் மூலம் தனது நூலை
வெளியீடு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். அவரின் முதலாவது
கவிதைத் தொகுப்பான பனிவிழும் பொழுதுகள் நூலிற்கான நயவுரையினை கிழக்குப்
பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எழுத்தாளருமான மறைந்த
செ.யோகராசா அவர்கள் நிகழ்த்தியிருந்ததுடன், இரண்டாவது கவிதைத் தொகுப்பான
குழலின் மையல் நூலிற்கான நயவுரையினை கவிஞர் மகுடம் மைக்கல் கொலின் அவர்கள்
நிகழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ந குகதர்சன்