(கல்லடி நிருபர் & கிறிஸ்டி )
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கூத்துக்களை பழக்கி அரங்கேற்றிய மத்தள வித்துவான் மானாகர் ஞானசெல்வம் அவர்களது இறுதிக் கிரிகைகள் இன்று விளாவட்டவானில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது அண்ணாவிமார்களால் மத்தள வாத்தியம் இசைக்கப்பட்டு அமர் மா.ஞானசெல்வம் கூத்து பழக்கிய பல கூத்து கலைஞர்களால் கூத்து பாடல்கள் பாடப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு - விளாவட்டவான் கவின் கலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர் அண்ணாவியார் மானாகர் ஞானசெல்வம் நேற்றையதினம் தனது 77 வது வயதில் இறைபதமடைந்தார்.
உயிரிழந்த அண்ணாவியார் மானாகர் ஞானசெல்வம் பல வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்களிலும், கிழக்கு பல்கலைக்கழகத்திலும் வடமோடி மற்றும் தென்மோடி கூத்துக்களை திறன்பட பழக்கி அரங்கேற்றி இருக்கின்றார்.
இற்காக அவருக்கு மத்தாள வித்துவான், கலைமணி உள்ளிட்ட பல பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தன.
அண்ணாவியார் மானாகர் ஞானசெல்வம், திருத்தொண்டர், சூர சங்காரம், 17ஆம்,18ஆம் போர், இராமாயணம், வள்ளியம்மன், பகதத்தன் போர், 13ஆம் போர், 14ஆம் போர், பப்பிரவாகு, கர்னன் சண்டை, குருக்கேத்திரன் போர் உள்ளிட்ட பல வடமோடி கூத்துக்களையும்,
வழவீமன், அல்லி, சத்தியவான் சாவித்திரி, இந்திரன் பூங்காவனம், அனு உருத்திரன், சித்திர புத்திரர், சுபத்திரை கலியாணம், நளமகாராசன், சாரங்கதரன், சீதை எதிர்வாதம், சூர சங்காரம் உள்ளிட்ட பல தென்மோடி கூத்துக்களையும் பழக்கி அரங்கேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














