உலக உயிர்ப்பல்வகைமை தினம் நேற்று (22) ஆகும். அதனை முன்னிட்டு ‘Be Part Of the Plan’அதாவது உயிர்ப் பல்வகைமைப் பாதுகாப்பின் பங்காளர்கள் ஆவோம் “ எனும் தொனிப்பொருளில் இந்த வருட நிகழ்வுகள் சர்வதேச ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உயிர்ப் பல்வகைமை தினத்தை அனுஷ்டிக்கும் வகையிலான வடமேல் மாகாண பிரதான நிகழ்வு குருநாகல் டீ,பி. வெலகெதர மகா வித்தியாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் குருநாகல் டீ.வி.வெலகெதர மகா வித்தியாலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வின் பிரதான விருந்தினராக வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் கலந்து கொண்டார். நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் மரக்கன்று ஒன்றையும் நாட்டி சிறப்பித்தார்.
வடமேல் மாகாணத்தை பசுமை வலயமாக மாற்றுதல், உயிர்ப் பல்வகைமையை பாதுகாத்தல், கரையோரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தீவிர கரிசனையுடன் தான் செயற்பட்டு வருவதாக தெரிவித்த கௌரவ ஆளுனர், வருடமொன்றுக்கு ஒரு நபர் ஒரு மரக்கன்று வீதம் நாட்டி பராமரிக்கும் செயற்பாடொன்றை அறிமுகப்படுத்துவதன் ஊடாக குறித்த இலக்கை எட்டிக்கொள்ள முடியும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் இதன் போது குறிப்பிட்டார்
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாகாணப் பணிப்பாளர் அஜந்த விஜயதிலக, குருநாகல் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் வசந்த வீரசிங்க, டீ.பி.வெலகெதர மகாவித்தியாலய அதிபர் ரணசிங்க, பிரதி அதிபர் திருமதி வாசல மற்றும் வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



















