சேனையூர் பிள்ளையார் கோவிலில் வைத்து சென்ற 12 ஆம் திகதி,முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக,சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நவரெட்ணராஜா ஹரிகரகுமார்(43), கமலேஸ்வரன் விஜித்தா(40), கமலேஸ்வரன் தேமிலா(22), செல்வ வினோத்குமார் சுஜானி(40)ஆகிய நால்வரும் நேற்று(17) மூதூர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் இவர்களை மூதூர் நீதிபதி தஸ்னீம் பெளசான்பானு விடுவித்தார்.அத்துடன் வழக்கு இம்மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சம்பூர் பொலிஸார் இவ் வழக்கை ஐ.சி.சி.பீ.ஆர்.சட்டத்தின் கீழ் முன்வைத்திருந்த போதும்,நேற்று இவ் வழக்கு மீளவும் நகர்த்தல் பத்திரம் மூலம் எதிராளிகள் தரப்பினால் அழைக்கப்பட்ட போது தாம் முன்னர் முன்வைத்த சட்டப்பிரிவின் அடிப்படையிலான குற்றச்சாட்டை விலக்கிக் கொள்வதாக சம்பூர் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எதிராளிகள் தரப்பில் சட்டத்தரணிகளான ந.மோகன்,பி.முகுந்தன்,தே.ரமனன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.





