(கல்லடி செய்தியாளர்)
2024 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படுகின்ற விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான கிழக்கு மாகாண மல்யுத்த போட்டி இன்று வெள்ளிக்கிழமை (17) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
ஆண், பெண் இருபாலருக்குமான இந்த மல்யுத்த போட்டியானது மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், மல்யுத்த விளையாட்டுக் கழகத் தலைவர்கள், மல்யுத்தப் பயிற்றுவிப்பாளர்கள், நடுவர்கள் மற்றும் வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான போட்டியில் 57kg, 57-61kg, 61-65kg, 65-70kg, 70-74kg, 74-79kg, 79-86kg, 86-92kg, 92-97kg, 97-125kg ஆகிய நிறைப் பிரிவுகளிலும்,
பெண்களுக்கான போட்டியில் 50kg, 50-53kg, 53-55kg, 55-57kg, 57-59kg, 59-62kg, 68kg மற்றும் 76 KG ஆகிய முறைப் பிரிவுகளிலும் போட்டிகள் இடம் பெற்றது.
மட்டக்களப்பு திருவோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆண்,பெண் இருபாலார் எனப் பல வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான போட்டியில் திருகோணமலை மாவட்டம் சார்பில் 4 தங்க பதக்கங்களும், 3 வெள்ளி பதக்கங்களும் பெற்றுக்கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் 4 தங்க பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும்
பெற்றுக் கொண்டனர்.
ஆண்களுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் 7 தங்கப் பதக்கங்களும், 7 வெள்ளி பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் பெற்றுக் கொண்டதுடன், திருகோணமலை மாவட்டம் சார்பில் 2 தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளிப் பதக்கமும், 2 வெண்கல பதக்கங்களும் பெற்றுக்கொண்டதுடன், அம்பாறை மாவட்டம் சார்பில் ஒரு தங்கப்பதக்கம் மாத்திரம் பெற்றுக் கொண்டனர்.
இந்த மல்யுத்தப் போட்டியில் தேசிய ரீதியிலான இறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.




















