எமது கடல் வளத்தை தமிழக மீனவர்கள் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது! -ஈரோஸ் ஜனநாயக முன்னணி பொதுச் செயலாளர் தெரிவிப்பு.

 


 


(கல்லடி செய்தியாளர்)

தமிழக மீனவர்கள் நவீன இராட்சத படகுகளின் துணையோடும், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளுடனும் இலங்கையின் வடபிராந்திய கடற்பகுதியில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்வளத்தை கொள்ளையிட்டு  செல்கின்றனர்.

 இச்செயற்பாடு தமிழர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, இலங்கையின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் விடயம் என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே எமது நாட்டின் மீன்வளத்தை இன்னுமொரு நாடு அடாத்தாக அபகரித்துச் செல்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தோடு பேசி வடபகுதி மீனவர்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் பொருத்தமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

பொருளாதார நெருக்கடியாலும், காலநிலை மாற்றத்தாலும் மீனவத் தொழிலாளர்கள் மிக மோசமான நெருக்கடிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

 இவ்வாறான நிலையில் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு பாதிப்பேற்படுத்தும் வகையில் இந்திய தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான அதி நவீன படகுகள்  இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி உட்புகுந்து மீன் குஞ்சிகளைக் கூட விட்டு வைக்காது அனைத்தையும் அள்ளிச் செல்கின்றனர்.

இது மனிதாபிமான செயற்பாடாக இருக்காது. அத்தோடு இலங்கைக் கடற்படையினர் கடல் எல்லை பாதுகாப்பு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது தமிழக மீனவர்கள் ஆயிரம், இரண்டாயிரம் படகுகளில் உள்நுழைந்து மீன்வளத்தை சுரண்டிச் செல்வது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கிறது.


 செங்கடல் பகுதியில் ரோந்துப் பணியை வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பும் கடற்படையை அரசோடு இணைந்து நாமும் பாராட்டுகிறோம். அதேவேளை நீங்கள் செங்கடல் பிரதேசத்தில் காட்டிய கரிசினையையும், கடமையுணர்வையும் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் தமிழக மீனவர்கள் விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.

எது எப்படியோ இலங்கையின் வடபகுதி மீனவர்களின் தொழில் பாதுகாப்பில் இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமும், தமிழக முதல்வரும், தமிழக மீனவர் சங்கங்களும், மீனவ தொழிலாளர் உறவுகளும் மனிதாபிமான அடிப்படையில் தீர்வினைக் காண ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தாது எடுக்க வேண்டும்.

அதேவேளை தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினை எட்டும் வகையில் இலங்கை வடபகுதி மீனவ உறவுகள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் உட்பட அனைத்து செயற்பாடுகளுக்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவ்அறிக்கையில் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.