மட்டக்களப்பு பொது நூலகமும், மட்டக்களப்பு பண்பாட்டலுவலகமும் இணைந்து நடாத்திய "துளிர்விடு" சஞ்சிகை வெளியீடு!










(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு பொது நூலகமும், மட்டக்களப்பு பண்பாட்டலுவலகமும் இணைந்து நடாத்திய "துளிர்விடு" சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை (27) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி, பேராசிரியர்களான சி.மௌனகுரு மற்றும் சி.சந்திரசேகரம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக் கொணரும் வகையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், "துளிர்விடு" சஞ்சிகை வெளியிடப்பட்டது. இச்சஞ்சிகையின் முதல் பிரதிகளை சஞ்சிகையின் ஆசிரியர்களான மாவட்ட கலாசார இணைப்பாளர்  த.மலர்ச்செல்வன் மற்றும் பொதுநூலகர் த.சிவராணி ஆகியோர் இணைந்து மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி மற்றும் மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் ஆகியோருக்கு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வுக்கு வருகை தந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், புத்துஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சஞ்சிகையின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் "ஈழத்துச் சிற்றிதழ் போக்கில் துளிர்விடு சஞ்சிகை" எனும் தலைப்பில் ஆசிரியர் ஜிப்ரி ஹாசன்  அறிமுக உரை நிகழ்த்தினார்.

இறுதியாக சஞ்சிகை ஆசிரியர்களில் ஒருவரும், மட்டக்களப்பு பொதுநூலக பிரதம நூலகருமான த.சிவராணியின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.