கொழும்பு நகரில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது

 


கொழும்பு நகரில் கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

 ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் ஆர். ஏ. டி. பி. ரணவக்க இதனை தெரிவித்தார்.

அண்மையில் பெய்த கடும் மழையினால் கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அந்தந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில், நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடி இவ்வாறான கால்வாய்களுக்கு அருகில் வீடுகளை கட்டியுள்ளவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்குளி, ஜேதவனய போன்ற பல இடங்களில் இவ்வாறானதொரு நிலை காணப்படுவதாகவும் மிக விரைவில் அகற்றப்பட வேண்டிய பகுதி இனங்காணப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான பணிகள் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.