சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தோரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு -மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம்


 










 

































































(கல்லடி செய்தியாளர்)

சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் 2022/2023 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட  பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மண்முனை வடக்குப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (05) பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாவுல் ஹக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிரணவ ஜோதி  மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இதன்போது  47 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட பெண்கள் கிரிக்கெட் அணி, ஆண்களுக்கான கராத்தேப் போட்டியில் பங்குபற்றி மூன்றாம் இடத்தினைப் பெற்று வெற்றியீட்டிய ஆர்.துஷ்யந்தன்,  பெண்களுக்கான தைக்வொண்டா 73 kg நிறைப் பிரிவில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட எஸ்.நிலுக்ஷகா, பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த  எவ்.டியான் ஸ்ரித், எவ்.டியான் பிறிடோ மற்றும் ஐ.கெல்வின் கிசோ, பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய மூத்தோருக்கான மெய்வல்லுனர் போட்டியில் 55- 59 வயதுப் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றி மூன்றாம் இடத்தைப் பெற்ற மாவட்டப் பயிற்றுவிப்பாளர் பி.ஜெயக்குமார்  ஆகியோர் கொரவிக்கப்பட்டனர்.

அத்தோடு இச்சாதனைகள் படைக்க பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர்களும் கௌரவம் பெற்றனர். அந்த வகையில் பயிற்சியாளர்களான கிரிக்கெட்- ரி.பிரசாத் மற்றும் அ.சிவகுமார், கராத்தே- எச்.ஆர்.சில்வா, தைக்கொண்டா- கௌசிகன் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களும் கௌரவம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.