ஸ்ரீ சித்தி விநாயகர், அன்னை பேச்சி தாயாரின் அருட்கடாட்சத்துடன் கதிர்காமத்தம்பி உடையார் , சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு பாடசாலை முகாமையாளர் K.O.வேலுப்பிள்ளை அவர்களால், சுவாமி விபுலானந்தர் மூலம் இராமகிருஸ்ண மிஷனுக்கு கையளிக்கப்பட்டு, பகவான் ஸ்ரீ இராமகிருஸ்ண பரமஹம்ஸரினதும் அருள் ஆசி பெற்று 115ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் விவேகானந்தா மகளிர் கல்லூரியின் சில முக்கிய வரலாற்றுச் சுவடுகள்.

 

 


 

 


 

 









 

 

 

 

 

 

 

 19.01.1909    - கதிர்காமத்தம்பி உடையார், சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டது.
இதற்கு கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை, கதிர்காமத்தம்பி உடையார் கனகரெட்ணம் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான (48 பேர்ச்) காணியையும், சபாபதிப்பிள்ளை உடையார் தனக்குச் சொந்தமான (48 பேர்ச்) காணியையும் வழங்கினர். 96 பேர்ச் விஸ்தீரணத்தில் இப்பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டு  கல்விப்பணியை ஆரம்பித்தது.
சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் பிற்பாடு அவர்பால் ஈர்க்கப்பட்டு உடையார்கள் கல்லடி பிரதேசத்தில் விவேகானந்தர் சபையை ஸ்தாபித்து நடாத்தி வந்த நிலையில் 1912ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின்  ஆன்மீக செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுத்துச் சென்ற சகோதரி அவபாமியா அவர்களை அழைத்து வந்து பாடசாலையின் நிரந்தர கட்டிடத்திற்கு அடிக்கல் நட வைத்தனர்.

04.07.1912    - திருவாளர்களான தோ.குமாரவேலு சின்னத்தம்பி, சபாபதி பிள்ளை உடையார் குமரையா, கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை, கந்தப்பெருமாள் அம்பிகைபாகப்பிள்ளை ஆகிய நால்வரை தத்துவக்காரர்களாக நியமித்து 5000.00 ரூபாய்களை உடையார்கள் பாடசாலையின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு K.C.V.K கம்பனியில் வைப்பிலிட்டனர்.
1917    - உடையார்களின் மறைவுக்குப் பின் கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை முகாமையாளராக பாடசாலையை பொறுப்பேற்றார். திருவாளர்களான தோ.சி.செல்லத்துரை,  சீ.குமரையா, தோ.கு.சின்னத்தம்பி, நொ.க.நல்லம்பி, க.அம்பிகைபாகபிள்ளை ஆகியோரடங்கிய நிர்வாகக்குழு பாடசாலையை நிர்வகிப்பதற்கு முகாமையாளரால் நியமிக்கப்பட்டது,
1925 பங்குனி    - எமது பாடசாலை முகாமையாளர் தலைமையில் சுவாமி விபுலானந்தரை சந்தித்து கல்லடி பிரதேசத்திற்கு ஆங்கில பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான கூட்டத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கச் சென்ற குழுவினருடன் எமது பாடசாலை நிருவாகக் குழுவும் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 1925.04.10    - சுவாமி விபுலானந்தர் கல்லடி பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டு பாடசாலை முகாமையாளர் தலைமையில் நமது ஆரம்ப கட்டிடத்திற்கு முன்பாக பேச்சியம்மன் மைதானத்தில் ஆங்கிலப் பாடசாலையை ஸ்தாபிப்பது பற்றி கூட்டம் நடைபெற்றது.
24.04.1928    - சுவாமி விபுலானந்தரிடம் 2809 இலக்க சாசனம் மூலம் 5000.00 ரூபாய் நிதியை முகாமையாளர் K.O.வேலுப்பிள்ளை அவர்கள் (உயிருடன் இருந்த ஒரே ஒரு நம்பிக்கை தத்துவக்காரர்) நமது சகோதர பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்காக வழங்கியதுடன் எமது பாடசாலை ஆரம்ப கட்டிடம் அதனை சார்ந்த நிலம் என்பவற்றையும் உத்தியோகபூர்வமாக சுவாமியிடம் கையளித்தார்.
    1928ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் மூலம் பாடசாலை இராமகிருஸ்ண மிஷனுக்கு கையளிக்கப்பட்டாலும் 1917 முதல் பாடசாலையை நிர்வகித்து வந்த நிர்வாகக் குழுவே பிரதேச மக்களின் ஆதரவுடன் பாடசாலையை நடாத்தி வந்தது. 1932இல் இராமகிருஸ்ண மிஷனிடம் முழுமையாக ஒப்படைத்தனர். 1932 முதல் ஸ்ரீ இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையை முழுமையாக பொறுப்பேற்று இ.கி.மி.விவேகானந்தா பெண்கள் பாடசாலை என்ற பெயரில் இயக்கத் தொடங்கியது.

1960   வரை     இராமகிருஸ்ண மிஷனின் நிர்வாகத்தில் பாடசாலை இயங்கியது. இக்காலகட்டத்தில் சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தர் மற்றும் மிஷன் துறவிகளின் ஆசியும் அர்ப்பணிப்பும் நிறைந்த சேவையும் பாடசாலையை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

1960.01.01     பாடசாலை அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. பின் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.

1970 காலப்பகுதி    - க.பொ.த உயர்தர கலைத்துறை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது.

1996 காலப்பகுதி    - சுவாமி ஆத்மகனானந்தஜீ மகராஜ் மற்றும் சுவாமி ஜீவனானந்தஜீ மகராஜ் ஆகியோரின் ஆசியுடனும் வழிகாட்டலுடனும் பழைய மாணவர்களும் சமூகமும் இணைந்துபாடசாலையை மறுமலர்ச்சிப் பாதைக்கு இட்டுச்சென்றனர். அதன் பயனாக பல அபிவிருத்திகளை பாடசாலை கண்டதுடன் விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு பாடசாலையின் அமைப்பு உயர் பார்வைக்கு மாற்றம் பெற்று நகர்ப்புற பாடசாலைகளின் தோற்ற நிலைக்கும் வளர்ச்சி நிலைக்கும் ஒப்பாக மாற்றம் பெற்று பெரு மறுமலர்ச்சி கண்டது.

2000 காலப்பகுதி    - விவேகானந்தா மகளிர் கல்லூரி என்ற பெயராக உயர் மாற்றம் பெற்றது.
கல்வி, கலாச்சார, விளையாட்டுத் துறைகளில் சாதனைகள் பதியப்பட்டு அண்மையில் வெளிவந்த க.பொ.த.சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளில் 95% சித்தி இலக்கை எட்டியிருப்பது இப்பாடசாலையின் வரலாற்றுச் சாதனையாக பதியப்படுகிறது. அத்துடன் பல்கலைக்கழகத் தேர்வு வீதமும் வளர்ச்சி கண்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.  ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன் அருட்கடாட்சத்துடன், பகவான் ஸ்ரீ இராமகிருஸ்ண பரமஹம்ஸரின் அருளாசியுடன், மிஷன் துறவிகளின் வழிகாட்டலுடன் அதிபர்,  ஆசிரியப் பெருந்தகைகள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரின் ஆதரவுடனும், பங்களிப்புடனும் இப்பாடசாலை வளர்ந்து செல்கின்றது

  115ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கு எமது ஊடகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது