காணாமல் போன 51- வயதுடைய பெண்ணொருவர் சடலமாக மீட்பு

 


 51 வயதான பிரதீபா என்ற பெண் கடந்த 27 ஆம் திகதி காலை முதல் காணவில்லை என அவரது மகள் முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கமைய முல்லேரிய பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் குழு ஒன்று சிசிரிவி கமெராவை பரிசோதித்த போது, ​​குறித்த பெண் அங்கொடையில் இருந்து கடுவெலைக்கு நீல நிற முச்சக்கரவண்டியில் சென்றமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடுவெல நகரில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் சாரதி ஒருவருடன் அவர் வருவது சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

அதன் பின் குறித்த பெண் உணவை வாங்கிக் கொண்டு சுமார் 10 நிமிடம் உணவு சாப்பிட்டு விட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

KI 3030 என்ற சாம்பல் நிற காரில் அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். மேலும் குறித்த பெண் அன்றிலிருந்தே காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் குறித்த கார் தொடர்பில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையின் போது, அது சியம்பலாப்பே பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் சுதீர வசந்த என்பவருடையது என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் இவருடன் சுமார் 20 வருடங்களாக நெருங்கிய உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பணத் தகராறு காரணமாக இருவருக்கும் சிறிது காலமாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அவரது சியாம்பலாப்பே பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, ​​ஒரு அறைக்குள் நீண்ட முடி மற்றும் இரத்தக் கறைகள், வீட்டின் வெளியே பகுதியளவு எரிந்த நிலையில் இரத்தக் கறையுடன் கூடிய பெண்களின் ஆடைகளின் பாகங்கள் காணப்பட்டன.

இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் களனி கங்கை கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டது.

இது தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த சடலம் நீண்டகாலமாக காணாமல் போயிருந்த 51 வயதுடைய பிரதீபாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இதனை அடுத்து 55 வயதான சுதீர வசந்தவுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரிய பொலிஸார் மற்றும் சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.