மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சதீவு மீட்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை -தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

 


இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பதில் இன்றுவரை சர்ச்சை நீடித்துக் கொண்டுதான் வருகிறது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவில் இந்திய மீனவர்கள் வந்து களைப்பாறலாம் அவர்களது வலைகளை உலர வைக்கலாம் என்றே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்த நிலையில் கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்றும் வரலாறு தெரியாமல் கச்சதீவு குறித்து உளறுகிறார்கள் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சதீவு மீட்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை என்றும் அவர் கூறினார்.. 

 கச்சதீவை திமுக அரசு தாரை வார்த்துவிட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள் என்றும் கருணாநிதியின் எதிர்ப்பை மீறித் தான் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கச்சதீவை இலங்கைக்கு வழங்க போடப்பட்டது ஒப்பந்தம் மட்டுமே என்றும் சட்டம் இல்லை என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு வழங்கப்பட்ட பிறகும் பிரதமர் இந்திராவை சந்தித்து கச்சதீவை மீட்க வேண்டும் என கலைஞர் வலியுறுத்தினார் என்றும் கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.