ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பில், நல்லிணக்க பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளன.
அதேநேரம், நாளை நடைபெறவுள்ள சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்புக்கு முன்னதாக கடந்த 9ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது,
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி தனித்தனியே சந்திப்பதற்கு எடுத்திருந்த தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.
அத்துடன், அவ்வாறு இடம்பெறுமானால் தாம் குறித்த சந்திப்பில் பங்கேற்க போவதில்லை எனவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே நேரத்தில் சந்திப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டிருந்தார்.
இதற்கமைய, முன்னதாக மூன்று நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்றும் நாளையும் மாத்திரம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.