ரிஸ்க்" (Risk) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான,தமிழ் சொல் என்ன ?

 


முதலில் ஆங்கிலச் சொல்லான Risk என்பதன் சரியான பொருளை விளங்கிக் கொண்டபின்... அதற்கு ஈடான தமிழ்ச் சொல்லைத் தேடுவோம்.

எளிமையாகச் சொல்வதென்றால் RISK என்ற சொல் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின் விளைவுகள் பற்றிய நிச்சயமற்ற தன்மையை,
அச்செயலின் பொழுது ஏதாவது எதிர்மறையான /மோசமான/பாதகமான நிகழ்வுக்கான சாத்தியங்களை உள்ளடக்கியதாகும்.

பெரும்பாலும் எதிர்மறையான, விரும்பத்தகாத,
பாதகமான விளைவுகளுக்கான சாத்தியத்தை உள்ளடக்கிய ஒரு வாய்ப்பு (அ) சூழ்நிலை என்றும் சொல்லலாம்.

இணையத்தில் இடர் என்ற சொல்லால் குறிப்பதை சில இடங்களில் காணமுடிகின்றது. Risk = இடர். Risk management = இடர் மேலாண்மை…என்பது ஓரளவு பொருத்தமாகத் தோன்றினாலும், Risk என்பது ஓர் செயலின் முடிவில் இழப்போ , இடரோ , துன்பமோ நேரும் வாய்ப்புக்கான சாதக, பாதகங்களைக் குறித்து எச்சரிப்பதாகும். மேலும், இறுதியில் எதிர்மறையான முடிவுகள் நேரலாம் அல்லது நேராதும் போகலாம். .. என்பதால் 'இடர் வாய்ப்பு' என்ற தமிழ்ச்சொல் பொருத்தமானதாகப் படுகிறது.

இடரை எதிர்நோக்கி இறங்கும் செயல் என்பதால், இடருக்கான வாய்ப்பு உள்ளதைக் குறிப்பதால் 'இடர் வாய்ப்பு' எனச் சொல்லலாம். இடர் வாய்க்கலாம், வாய்க்காமலும் போகலாம் அல்லவா?

இடர் வாய்ப்பு என்பதைச் சுருக்கி இடர்ப்பு என்றும் கூறலாம்.

இதற்கு நெருக்கமான சொல்லான 'இடைஞ்சல்' என்ற சொல் கூட பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

  • இ = பின்னிடற் குறிப்பு.
    இடறு = பின்விழத் தடுக்கு.
    இடை = பின்னிடு, தோற்றோடு.
    இடக்கை = தோற்றக்கை.
    இடம் = தோல்வி.
    இடர் = துன்பம்.
    இடைஞ்சல் = பிற் செலுத்தும் தடை.