சில நோய்களை குணமாக்கும் சக்தி நல்ல இசைக்கு உண்டா?

 

'இசை கேட்டால் புவி அசைந்தாடும்…'

குழந்தைகள் உறங்குவதற்குப் பாடும் தாயின் தாலாட்டு, குழந்தைகளுக்கு ஏற்படும் சிறு சிறு உபாதைகளை நீக்கும் இசையாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

சமயக் குரவர்கள் இசையைக் கருவியாகப் பயன்படுத்தி, பலவிதத் துன்பங்களை, நோய்களைத் தீர்த்து வைத்துள்ளனர்.

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் தம் பதிகங்களால், நிகழ்த்திய அதிசயங்கள் பல.

திருமருகல் என்னும் ஊர், காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது .இங்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தன் தலைவனுடன் பெண் வந்திருந்த போது ,அந்த ஆண்மகனை பாம்பு தீண்டியது. ஆண்மகன் இறந்து விட்டான். அவள் சம்பந்தரிடம் முறையிட இந்தோளப் பண்ணில் அமைந்த பதிகத்தை பாடி உயிர்த்தெழ செய்து, பெண்ணின் துயரைத் துடைத்தார்.

கொடிமாடச் செங்குன்றூரில் குளிர் காய்ச்சல் தோன்றி அனைவரையும் வருத்திய போது, திருஞானசம்பந்தர் 'அவ்வினைக்கு இவ்வினையாம்' என்று வியாழக்குறிஞ்சிப் பண்ணில் பதிகம் பாடி நோயை தீர்த்தார்.

கூன் பாண்டியனுக்கு (நின்ற சீர் நெடுமாறன்) ஏற்பட்டத் தீராதக் காய்ச்சலை, சம்பந்தர், காந்தாரப் பண்ணில் அமைந்த,' 'மந்திர மாவது நீறு; வானவர் மேலது நீறு' என்னும் பதிகத்தைப் பாடி, குணப்படுத்தினார்.

திருமயிலையில் சிவநேசர் என்பவர் தவமிருந்து பெற்ற மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தர்க்கு மணமுடிக்க விரும்பினார். ஒருநாள் பூம்பாவை நந்தவனத்திற்கு பூப்பறிக்க சென்றபோது, பாம்பு தீண்டி இறந்தார். தந்தை அவள் சாம்பலை குடத்தில் இட்டு மூடி பாதுகாத்தார் .பல நாட்கள் கழித்து திருமயிலைக்குத் திரும்பிய சம்பந்தர்,' மட்டிட்ட புன்னையம கானல் மடமயிலை' எனும் பதிகத்தை பாடி பூம்பாவையை உயிர்த்தெழுப்பினார்.

அரக்கக்குல மன்னன் இராவணனின் இசைக்கு மயங்கி ,கற்பாறையே உருகியதாக புராணங்கள் கூறுகின்றன.

அமிர்தவர்ஷினி ராகம் மழையைத் தருவிக்கும் என்று நம்பப்படுகிறது.அதோடு இந்த ராகம் உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தண்ணீரோடு தொடர்புடையது என்பதால், சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளதாம்.

இவ்வாறு சில ராகங்கள் கேட்டால் சில நோய்கள் குணமாகும் என்று மருத்துவ ரீதியாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது . உலகின் பல நாடுகளும் இசையால் மனிதனின் நோயை தீர்க்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

அக்பர் — தான்சேன்

அக்பர் அவையிலிருந்த 'தான்சேன்' எனும் இசை வல்லுநர் , தம் இசைக்கு பெருமைசேர்க்கும் வகையில், பாரம்பரிய இசையில் என்றென்றும் நிலைக்கச் செய்யும் படி இயற்றிய ராகம் தர்பாரி.இந்த ராகத்தை கேட்கும் பொழுது,' இதயத்தின் உறங்கும் ஆசைகள் விழித்தெழுகின்றன.மேலும் , பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுகிறது', என்று அக்பர் கூறுவாராம். தர்பாரி ராகத்தைப் பாடத் தொடங்கும்போதே, மனம் அமைதி பெறுகிறது என்று, அரசு விவகாரங்களில் நாள் முழுவதும் உழன்ற பிறகு அமைதியையும் சாந்தியையும் தேடும் வழக்கமுடைய அக்பருக்காக இந்த ராகத்தைப் பாடுவாராம் தான்சேன்.

இரவில் தூக்கம் வராமல் இருக்கும் போது கேட்கும் மெல்லிய இசை தூக்கத்தை வரவைக்கிறது.

மெல்லிய இசையை கேட்பதால் மனம் மகிழ்ச்சியடைந்து, உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வலுக்கிறது. இதனால் சிகிச்சை முறைகள் எளிதில் நோயை குணமாக்க உதவுகின்றது.

மருந்தாகச் செயல்படும் இசை

இசையின் மூலம் நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு வகை சிகிச்சை தான் மியூசிக் தெரபி. நோயை மட்டும் இன்றி மனிதனுக்கு தேவைப்படுகிற ஓய்வு, நினைவாற்றல் போன்ற ஆரோக்கியம் சார்ந்த தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய சிகிச்சையும் இதுவாகிறது.

மனதுக்கும் மூளைக்கும் இதமான வகையில் மெல்லிய இசைக்கருவிகளால் வாசிக்கப்பட்ட வருடும் இசை ,பாடல் வரிகள் இல்லாத இசைக்கருவிகளால் மட்டுமே வாசிக்கப்பட்டு தற்போது இணைய தளங்களில் காணொலிகளாகக் கிடைக்கின்றன.இதை நாள்தோறும் சில நிமிடங்களுக்கு கேட்கலாம்.

இசையால் தீரும் நோய்கள்

கவனத்திறன் மற்றும் நினைவாற்றல் பெருக, மனசோர்வு நீங்க, சர்க்கரை நோய் குணமாக ,பயம் மற்றும் கவலைகள் நீங்க, இதயத்தின் செயல்பாடு சீராக, மன அமைதி பெற ,கருவுற்றிருக்கும் பெண்களுக்காக தூக்கம் மற்றும் ஓய்வு கிடைக்க ,மன அழுத்தம் குறைய ,அறிவு மற்றும் படைப்பாற்றல் திறன் ஓங்க ,வலி குணமாக, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி நீங்க, குழந்தை அழுவதை நிறுத்த ,ஓய்வை நிம்மதியாக அனுபவிக்க, குழந்தை தூங்குவதற்கு என பல வகைகளில் இசை நோய் தீர்க்கும் மருந்தாகிறது..

இசை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி, பக்கவிளைவுகளில்லாத சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது.

இசையை குறைந்த ஒலிஅளவுடன் கேட்கும் பொழுது, காதுக்கும், மனதிற்கும் இனிமையைக் கூட்டும்.