பாடசாலை நேர அட்டவணைகளில் மாற்றம்! புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியீடு!

 



புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான பாடசாலை நேர அட்டவணை மாற்றங்கள் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் வகுப்புகளுக்கான நேர அட்டவணைகளில் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், தரம் 1 மற்றும் 2 மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரையும், தரம் 3 மற்றும் 4 மாணவர்களுக்கான நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தரம் 5 முதல் க.பொ.த. உயர்தரம் வரையிலான வகுப்புகளுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலை நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்புகளின் பாடத்திட்ட அறிமுக கால அட்டவணை

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், இவ்வாண்டு தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2027ஆம் ஆண்டு தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மேலும், 2030ஆம் ஆண்டு தரம் 5 இற்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதுடன், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான புதிய பாடத்திட்டமும் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2033ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பிரிவிற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சுற்றறிக்கையின் வழிகாட்டல்கள் அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாணக் கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களின் ஊடாக மாணவர்கள் படிப்படியாக புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் வகையில் கல்வி முறைமை மாற்றியமைக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.