தீபாவளியையொட்டி காரைதீவில் அமரர் கதிர்காமத்தம்பி ஞாபகார்த்த கிரிக்கெட் போட்டி: விவேகானந்தா அணி வெற்றி வாகை













(வி.ரி.சகாதேவராஜா)

தீபாவளியையொட்டி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம்  நடாத்திய, அம்பாறை மாவட்டத்தின் தமிழ் அரசியலாளரும் வைத்தியருமான அமரர் சி. கதிர்காமத்தம்பியின் 26 ஆவது ஞாபகார்த்த கிரிக்கெட் போட்டி - (Late Kathirkamathampy Memorial Trophy 2026,)   விவேகானந்தா கழகத் தலைவர் வீரசிங்கம் தயாபரன் தலைமையில் நேற்று முன்தினம் ( 07) சனிக்கிழமை காரைதீவு விபுலானந்தா  மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 திருகோணமலை துறைமுக அதிகாரசபை ஊழியர்களின்  சார்பில் சிரேஸ்ட உத்தியோகத்தர் ஞானரெத்தினம் நவயுகன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் அனுசரணை ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி சிறப்பித்தனர்.

கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களும் அமரர் கதிராமத்தம்பியின் புதல்வர்களுமான நைட்டா அதிகாரி க.செல்வப்பிரகாஷ், ஆசிரியர் க.அமிர்தபிரகாஷ் கழக பிரதானிகளான வெ.ஜெயகோபன், வெ.வேற்குமரன், வி.குலேந்திரன்,  மு.வரதராஜன்,திருகோணமலை துறைமுக சிரேஸ்ட உத்தியோகத்தர் ஞானரெத்தினம் நவயுகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இப் போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தை எதிர்த்து செட்டிபாளையம் நியூட்டன் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற நியூட்டன் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணி சார்பில் அதிரடி வீரர் ரி. கஜேந்தன் சதம் அடித்தார். சிரேஸ்ட வீரர் ஏ. விசிகரனுடன் இணைந்து அவர் 100 ஓட்ட இணைப்பாட்டத்தையும் அமைத்தார்.

இறுதியில் விவேகானந்தா அணி 23 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. வெற்றிக் கிண்ணத்தை அணித் தலைவர் வி.சர்மிலன்  பெற்றுக் கொண்டார்.

ஆட்டநாயகன்விருதை அதிரடியாக 126 ஓட்டங்கள் பெற்ற ரி. கஜேந்தன்  பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் புலமைப்பரிசில் மற்றும் சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
கழக செயலாளர் அ.சசிதரன் நன்றியுரையாற்ற, நிகழ்வின் நேர்முக வர்ணனையை கழக பிரதானி கே.உமாரமணன் நேர்த்தியாக செய்திருந்தார்.

அமரரின் நினைவை போற்றும் வகையிலும், இளம் தலைமுறையினரின் கல்வி மற்றும் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது.