து. கௌரீஸ்வரன்,
சிரேஷ்ட விரிவுரையாளர்,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை.
ஆய்வுச் சுருக்கம் :
உள்ளுர்க் கலை மரபுகள் பற்றிய கற்கையில் அவதானிக்கப்படும் விடயங்களுள் ஒன்று பெரும்பாலான உள்ளுர்க் கலைகளும், உள்ளுர்க் கலைஞர்களும் இதிகாச, புராணீகக் கதையாடல்களுக்குள் கட்டுண்டு கிடப்பதாகும். இதனால் தென்னாசிய வட்டகையில் மரபுக் கலைகள் எனும் போது பெரும்பாலும் அவை இந்து மதஞ் சார்ந்ததாகவும், இதிகாச புராணக் கதையம்சங்களைக் கொண்டதாகவும் அல்லது அதையொத்தவைகளாகவும் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இயல்பாகவே உருவாகின்றது. இந்நிலையில் பெரும்பாலான மரபுக் கலைஞர்கள் இதிகாச, புராணக் கதையாடல்களுக்குள் நின்றே தமது புதிய படைப்புக்களை ஆக்கியுள்ளார்கள். இதேவேளை இத்தகைய பிரதான போக்கிற்கு மறுதலையாக உள்ளுர்க் கதைகளையும், சமகாலச் சம்பவங்களையும் பாடுபொருளாகக் கொண்டு புதிய படைப்புக்களை ஆக்கியுள்ள உள்ளுர்க் கலைஞர்களையும் நாம் ஆங்காங்கே காண முடிகின்றது. எனினும் அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் இதிகாச புராணக் கதையாடல்களினால் விதைக்கப்பட்டுள்ள கருத்தியல்களுக்குள்ளிருந்து தம்மை முழுமையாக விடுவிக்காதவர்களாகவே புதிய கதைகளைப் பாடியுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது. இதனால் உள்ளுர் நிகழ்த்து கலைகள் சார்ந்த பெரும்பாலான நவீன ஆய்வறிவாளர்கள் மரபுக்கலைஞர்களுடன் முற்போக்கான கருத்தியல்கள் பற்றி விவாதிப்பதை விடுத்து அவர்களிடமிருந்து ஆற்றுகை நுட்பங்களைப் பெற்றுக் கொள்வதிலும் கற்றுக் கொள்வதிலும் மட்டுமே நாட்டஞ் செலுத்தியுள்ளனர். இப்பின்புலத்தில் ஈழத்தில் இரண்டாயிரமாம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச்செயற்பாடு உள்ளுர் மரபுக் கலைஞர்கள் இதிகாச புராணக் கதையாடல்களைக் கேள்விக்குள்ளாக்கி முற்போக்குச் சிந்தனைகளுடன் புதிய கூத்துப் பனுவல்களை ஆக்கித் தரும் நிலையினை வலுப்படுத்தியுள்ளது. இவ்வாறு முற்போக்குச் சிந்தனைகளுடன் கூத்துப் பனுவல்களை ஆக்கியுள்ள மரபுக்கலைஞரான செ.சிவநாயகம் என்பவருடைய படைப்பாக்கங்கள் தொடர்பாக இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.
திறவுச்சொற்கள் : கருத்தியல், பாடுபொருள், கட்டவிழ்ப்பு, மீளுருவாக்கம்
அறிமுகம் :
தென்னாசியப் பிராந்தியத்தில் இலங்கைத் தீவு தனக்கெனப் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்ட நாடாக விளங்கி வருகின்றது. இத்தீவினை ஈழநாடு எனவும் அழைப்பர். இந்த ஈழ நாட்டில் வாழும் தமிழ்பேசும் மக்களுடைய பண்பாட்டில் உள்ளுர் நிகழ்த்து கலை வடிவங்களின் செல்வாக்குக் குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகின்றது.
இந்நிகழ்த்து கலைவடிவங்கள் பெரும்பாலும் சமுதாயக் கலைகளாக இன்றுவரை இயக்கம்பெற்று வருகின்றன. இந்தவகையில் ஈழத்தின் மட்டக்களப்பில் தென்மோடி, வடமோடி, மகிடி, வசந்தன் எனப்பல உள்ளுர் நிகழ்த்து கலை வடிவங்கள் பயிலப்பட்டு வருகின்றன. வருடா வருடம் உள்ளுர்க் கோவில்களின் விழாக்காலங்களை மையப்படுத்தி இக்கலை வடிவங்கள் பயிலப்பட்டு ஆற்றுகை செய்யப்படுகின்றன. இக்கலை வடிவங்கள் அவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அண்ணாவிமார்களதும், ஏட்டண்ணாவிமார்களதும், மூத்த கூத்துக்கலைஞர்களதும் செயற்பாடுகளுடாக இயக்கம்பெற்று வருகின்றன.
இவ்விதமாக இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளுர் மரபுக்கலைஞர்களுள் ஒருவராக மட்டக்களப்பு சீலாமுனையைச் சேர்ந்த ஏட்டண்ணாவியாரான செ.சிவநாயகம் அவர்கள் விளங்கி வருகின்றார்.
நீண்ட செழுமையான கூத்துப்பாரம்பரியத்தைக் கொண்ட ஊரில் அப்பாரம்பரியத்தை முன்னெடுத்த குடும்பத்தில் பிறந்த இவர் நவீன பாடசாலைக் கல்வியைக் கற்று அரச தொழில் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டவர். நவீன கல்வியைக் கற்றதால் எழுத்தாற்றல் நிரம்பியவர். இவருடைய தந்தையார் கூத்துப் பனுவல்களைப் பாதுகாத்து அவற்றைப் பராமரித்துப் புதுப்பித்து வரும் பணியை ஊர்க் கூத்துப் பண்பாட்டில் மேற்கொண்டு வந்தமையால் தந்தையாரின் பணியை அவருக்குப் பின்னர் தொடருபவராக இவர் செயலாற்றி வருகின்றார். பெரும்பாலும் இதிகாச, புராணக் கதைகளைப் பாடுபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கூத்துப்பனுவல்களைப் பராமரிப்பதுவும் அவற்றைக் கூத்துப் பழகும் காலங்களில் புதிதாகப் பிரதி பண்ணுவதும் கூத்தர்களுக்கு அதனை ஞாபகமூட்டுவதும், கூத்துப் பாடல்களின் மெட்டுக்களை ஞாபகத்திற் கொண்டு வருதலும் ஊர்க்கூத்தரங்கில் செ.சிவநாயகம் அவர்களின் பிரதான பணியாக இருந்தது.
இதனால் கூத்துக்களை எழுதும் தேர்ச்சியை இவர் இயல்பாகவே பெற்றுக் கொண்டார். 1990 களில் சீலாமுனையில் தருமபுத்திரன் வடமோடிக் கூத்தினைப் பயில முற்பட்ட போது அந்தக் கூத்துப் பனுவல் இல்லாத நிலையில் மூத்த அண்ணாவியாரான கிருஸ்ணப்பிள்ளை என்பவருடன் சேர்ந்து ஞாபகங்களிலுள்ள தருமபுத்திரன் கூத்தினை மீள எழுதி அதனை வைத்து கூத்தினைப் பயின்று அரங்கேற்றிய வரலாற்றின் குறிப்பிடத்தக்க பங்காளியாக, ஓர் ஏட்டண்ணாவியாராக இவர் தன்னை இனங்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து புதிய சில இதிகாச, புராணக் கதைகளைத் தழுவிய கூத்துக்களைத் தேவைகள் கருதி இரண்டாயிரமாம் ஆண்டு வரை இவர் படைப்பாக்கஞ் செய்துள்ளார். உதாரணமாக இவரால் எழுதப்பட்ட 'அருச்சுனன் பெற்ற பாசுபதம்' என்ற வடமோடிக் கூத்தினைக் காண முடிகின்றது.
இவ்விதமாக இரண்டாயிரமாம் ஆண்டு வரை இதிகாச, புராணக் கதையாடல்களுக்குள் கட்டுண்ட ஓர் உள்ளுர் மரபுக் கலைஞனாக வாழ்ந்த செ.சிவநாயகம் அவர்களின் கலை வரலாற்றில் 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்த கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு பெருந்தாக்கஞ் செலுத்தியுள்ளது.
அதாவது இதிகாச புராணக் கதைகளுடாக பெண்களுக்கு எதிராகவும், விளிம்பு நிலை மனிதர்களுக்கு எதிராகவும், ஆணாதிக்கத்திற்குச் சார்பாகவும் பிற்போக்காகக் கூத்துக்களைப் பாடியும் பழகியும் வந்த நிலையின்று விடுபட்டு முற்போக்கான சிந்தனைகளுடன் கூத்துக்களை எழுத வேண்டும், பாட வேண்டும், ஆட வேண்டும் என்ற நிலை மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.
கருத்துநிலையில் மாற்றம் :
2002 ஆம் ஆண்டிலிருந்து உள்ளுர் கூத்தரங்கைச் சமகாலத்திற்குரிய வகையில் தகவமைக்கும் பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு மட்டக்களப்பு சீலாமுனைக் கிராமத்துக் கூத்துக் கலைஞர்களுடன் பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தப்பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டில் முழுமையாகப் பங்குபற்றிய கலைஞனாக செ.சிவநாயகம் அவர்கள் விளங்கினார். இந்த ஆய்வுச் செயற்பாட்டில் உள்ளுர்க் கலைஞர்களுடன் அவர்கள் காலங்காலமாகப் பயின்று வரும் கூத்துக்களின் பாடுபொருள் சார்ந்த உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதாவது இதிகாச, புராணக் கதைகளை மையப்படுத்தி ஆக்கப்பட்டுள்ள கூத்துப்பனுவல்கள் கட்டவிழ்த்து உரையாடப்பட்டன. இந்த உரையாடல்கள் பல்வேறு வழிவகைகளில் நடைபெற்றிருந்தன. தருமபுத்திரன் எனும் வடமோடிக் கூத்துப்பனுவலை மையப்படுத்தி இவ்வுரையாடல் நடைபெற்றதால் வியாசரின் மகாபாரதம், பாரதியாரின் பாஞ்சாலி சபதம், இதிகாச, புராணக் கதைகள் குறித்த மறுவாசிப்பு முறைமைகள் எனப்பல விடயங்கள் பகிரப்பட்டு அவற்றுடன் கூத்துப்பனுவலை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இந்த உரையாடல்கள் தொடர்ந்தன.
இந்த உரையாடல்கள் அனைத்திலும் செ.சிவநாயகம் அவர்கள் ஆர்வத்துடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் பங்குபற்றியிருந்தார்.
இதன் காரணமாக அவருடைய வழமையான கருத்துநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான நிலைமைகள் வலுவடைந்தன. அதாவது இதிகாச புராணக் கதையாடல்களின் பிடிக்குள்ளிருந்து விடுபட்டு விமர்சன மனப்பாங்குடன் இதிகாச புராணக் கதைகளைக் கட்டவிழ்க்கும் நிலைமாற்றத்தை எய்தப்பெற்றார். இக்கலந்துரையாடல்களுடாக தருமத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போர் என்று கட்டமைக்கப்பட்டு தருமத்தின் புத்திரர்களாகப் பாண்டவர்களையும், அதர்மத்தின் புத்திரர்களாகக் கௌரவர்களையும் சாதாரணர்களிடையே பரவலாக்கி வந்த 'தருமபுத்திரன்' எனும் கூத்து, உண்மையில் அப்படியானதல்ல மாறாக அரச அதிகாரத்திற்காக பெண்களையும் சிறுவர்களையும் குடியானவர்களையும் பகடைகளாகவும் பலியாகவும் வைத்து நடத்தப்பட்ட 'சிம்மாசனப் போர்' என்று மீளுருவாக்கஞ் செய்யப்பட்டது. இதனைச் செ.சிவநாயகம் அவர்கள் பின்வருமாறு தனது நூல் ஒன்றில் பதிவு செய்துள்ளார்.
'1990 ஆம் ஆண்டில் நாங்கள் தர்மபுத்திரன் என்னும் கூத்தை அரங்கேற்றியபோது அதன் கதை ஓட்டத்தின் கரு தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெற்ற யுத்தமென்றும் பாண்டவர்கள் எல்லா விடயங்களிலும் தர்மவான்கள் என்றும் கௌரவர்கள் எல்லா விடயங்களிலும் அதர்மவான்கள் என்றும் சித்தரித்திருந்தோம். இதுவே காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்த கதை. பாரதக்கதை பற்றிய புதிய சிந்தனைகள், ஏற்பட்ட பிற்பாடே அக்கதைகளில் உள்ள சில ஒடுக்குமுறைகள் எங்களுக்குப் புரியத்தொடங்கியது. இச்சிந்தனைகள் மூலமாகப் பிறந்ததே சிம்மாசனப்போர் என்ற வடமோடிக் கூத்தாகும். சிம்மாசனப்போர் என்ற கூத்தின் பாடல்களை நான் எழுதத் தொடங்கிய போது புதிய சிந்தனைகளால் சாதிகளைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தப்பட்ட பாடல்களை முற்றாக நீக்கினேன்.'
'பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போராட்டமல்ல அரசு உரிமைக்கே நடந்த போராட்டமாக கதையைச் சித்தரித்து இப்போராட்டத்தினால் அனேகமாக அப்பாவி மக்களே அநியாயமான மரணங்களைத் தழுவிக் கொண்டனர் போன்ற சம்பவங்களை சித்திரித்துக்காட்டியது. இக்கொடிய யுத்தம்தான் நேர்மையான முறையில் நடைபெற்றதா என்றால் அதுதான் இல்லை. யுத்தம் ஆரம்பமாகும் முதலே மாயவன் தந்திரத்தால் அரவானைக் களப்பலி கொடுத்தது துவக்கம் துரியோதனனை யுத்ததர்மம் மீறி வீமன் நாபிக்கும் கீழ் அடித்துக் கொன்றதுடன் முடிவடைந்த யுத்தத்தில் எத்தனை யுத்ததர்மங்களை இரு பகுதியாருமே மீறினார்கள்' (சிவநாயகம்.செ,2007)
செ.சிவநாயகம் அவர்கள் இரண்டு முறைமைகளில் முற்போக்கான கூத்துப்பனுவல்களை உருவாக்கித் தந்துள்ளார் அதாவது ஒன்று வழமையாகப் பயின்று வரும் இதிகாச புராணக் கதையினை அடிப்படையாகக் கொண்ட கூத்துப்பனுவல் ஒன்றை எடுத்து கூத்து மீளுருவாக்கத்தில் ஆர்வமுடைய நபர்களுடன் சேர்ந்து கலந்துரையாடி அதன் கருத்தியலைக் கட்டவிழ்த்து சமகாலத்திற்குப் பொருந்தத்தக்க வகையிலான முற்போக்குச் சிந்தனைகளுடன் மீளுருவாக்கஞ் செய்து எழுதுவது.
இச்செயற்பாட்டில் செ.சிவநாயகம் கலந்துரையாடல்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விடயங்களை உள்வாங்கிக் கூத்துப்பனுவலை மீளுருவாக்கும் கலைஞராகத் தனது வகிபாகத்தைச் செலுத்தியுள்ளார்.
இவ்வாறு கூட்டுக் கலந்துரையாடல்களுடாக இவரால் ஆக்கப்பட்ட கூத்துப்பனுவல்களாக 'அபிமன்யு இலக்கணன் வதம்', 'சீதை சூர்ப்பனகை வதை', 'அல்லியின் எதிர்வாதம்' முதலிய கூத்துப் பனுவல்கள் காணப்படுகின்றன.
அடுத்தது, கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த அனுபவங்களையும் பட்டறிவையும் பயன்படுத்தித் தானே தனியாகச் சில மரபார்ந்த கூத்துப்பனுவல்களை மறுவாசிப்பிற்குட்படுத்தி மீளுருவாக்கித் தந்துள்ளமையாகும்.
இந்தவகையில் மரபார்ந்த கூத்துப்பனுவல்களான 'குயலவன்' நாடகத்தை 'சீதையின் துயரம்' என்றும், 'நரகாசுரன் வதை'யினை 'சூழ்ச்சிக்குள் அகப்பட்ட நரகாசுரன்' என்றும் மீளுருவாக்கியுள்ளார். இத்தோடு புதிய வரலாற்றுக் கூத்துக்களையும் இவர் ஆக்கியுள்ளார் உதாரணமாக மட்டக்களப்பினை ஆட்சி செய்த பெண் அரசியான ஆடகசவுந்தரியின் கதையினைக் கூறும் வடமோடிக் கூத்தினையும், புலியமாறன் எனும் அரசனுடைய கதையினைக் கூறும் வடமோடிக் கூத்தினையும் இவர் உருவாக்கியுள்ளார்.
சிறுவர் கூத்துகளின் ஆக்குனர் :
ஈழத்துக் கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் பல்பரிமாணங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக சிறுவர்களுக்கான கூத்தரங்கின் முன்னெடுப்புக் காணப்படுகின்றது. 'கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக, பாரம்பரிய சூழலில் சிறுவர்களின் நிலைப்பாடு தொடர்பாக சிந்திக்கப்பட்டதன் விளைவாக, சிறுவர் கூத்தரங்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.' (சுலக்சனா.இரா, 2021)
இதில் சிறுவர்களுக்குப் பொருத்தமான ஆக்கபூர்வமானதும் முற்போக்குத்தன்மை கொண்டதுமான கதைகளை உள்வாங்கி அவற்றினைச் சிறுவர்களுக்கான கூத்துப்பனுவல்களாக ஆக்கித் தருவதில் செ.சிவநாயகம் அவர்கள் முன்னோடியாகத் திகழ்கின்றார்.
இந்தவகையில் கிரிஜா என்ற பெயரில் தழுவலாக்கஞ் செய்யப்பட்டுள்ள சிறுவர்களுக்கான ஒரு முற்போக்குக் கதை 'மழைப்பழம்' எனும் பெயரில் வடமோடிக் கூத்துப் பனுவலாக அவரால் ஆக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் மேற்கோள் எடுத்துக்காட்டுகின்றது
'கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களினால் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்ட 'கிரிஜா' எனும் கதையினை அடிப்படையாகக் கொண்டது. சீலாமுனைக் கிராமத்தைச் சேர்ந்த கூத்துப் பனுவல் எழுத்தாளர் திரு செ.சிவநாயகம் அவர்களால் 'மழைப்பழம்' எனும் பெயரில் கூத்துப் பிரதியாக எழுதப்பட்டது. (துலக்சனா.தி,2014) இதேபோல் 'அன்னப்பட்சி' எனும் சிறுவர் கூத்தினையும் இவர் எழுதியுள்ளார்.
அடுத்து செ.சிவநாயகம் அவர்கள் தனது கற்பனையில் உருவான 'வனராணி' என்னும் சிறுவர் கூத்தினையும் உருவாக்கித் தந்துள்ளார்.
இவ்வாறு இவர் படைத்துள்ள சிறுவர்களுக்கான வடமோடிக் கூத்துப் பனுவல்கள் அனைத்தும் இலங்கையின் மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் முதலிய மாவட்டங்களிலுள்ள பல்வேறு ஊர்களிலும் சிறுவர்களிடையே பயிற்றுவிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முடிவுரை :
இவ்வாறாக ஈழத்துக் கூத்தரங்க வரலாற்றில் மரபார்ந்த மூத்த கூத்துக் கலைஞனாகிய செ.சிவநாயகம் அவர்கள் தன்னுடைய வரலாற்றில் அகவை அறுபதை அண்மித்த முதுமைக் காலத்தில் மரபார்ந்த இதிகாச, புராணக் கதையாடல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கூத்துப்பனுவல்களைக் கட்டவிழ்த்து அவற்றின் சமகாலப் பொருத்தப்பாடு தொடர்பாகச் சிந்தித்து கூத்து மீளுருவாக்கத்தில் ஆர்வங்கொண்ட கலைஞர்களுடன் சேர்ந்தும், தனியாகவும் சமகாலத்திற்குப் பொருந்தக் கூடிய முற்போக்குச் சிந்தனைகளுடன் கூடிய கூத்துப் பனுவல்களை உருவாக்கியுள்ள கவனிப்பிற்குரிய ஓர் ஏட்டண்ணாவியாராகத் தன்னை அடையாளங்காட்டி நிற்கின்றார் என்பதையும், இதனூடாக காலங்கடந்த கருத்தியல்களுடன் காணப்படும் மரபார்ந்த கூத்துப்பனுவல்களைக் காலாவதியாகாது காலத்திற்குரியவகையில் தகவமைக்கும் கூத்து மீளுருவாக்குனராகத் தன்னை இனங்காட்டி நிற்கின்றார் என்பதையும் ஆய்ந்தறிய முடிகின்றது.
அடிக்குறிப்புக்கள்
01. கூத்து மீளுருவாக்கம் அனுபவப்பகிர்வு - 1, சிவநாயகம்.செ, 2007, மட்டக்களப்பு
02. https://globaltamilnews.net/2021/164294/
03. https://www.oodaru.com/?p=7749







