மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்!






மட்டக்களப்பு மாவட்டம், மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் திருத்த மற்றும் அபிவிருத்திப் பணிகளைப் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

பாடசாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர், முன்னெடுக்கப்பட்டு வரும் திருத்தப் பணிகளின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்ந்ததுடன், பாடசாலை நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, பாடசாலையின் தற்போதைய தேவைகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்.

கிராமப்புறப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்கள் சிறந்த கற்றல் சூழலில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கல்வித்துறையின் வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகளும் பொருத்தமான கற்றல் சூழலும் முக்கியமானவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விஜயத்தின்போது, மகிழூர் வட்டார இணைப்பாளர் திரு. சேதுராஜா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மகிழூர் வட்டார உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாடசாலை நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட தேவைகள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பிலும் கவனம் செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர், மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களுக்குச் சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.