தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் கல்குடா கல்வி வலயத்திற்கு தேசிய ரீதியில் மூன்றாம் இடம்!

 



கல்வித்துறையில் தேசிய மட்டத்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்து, கல்குடா கல்வி வலயம் பெருமைமிகு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

அண்மையில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று கல்குடா கல்வி வலயம் தனது நிர்வாகத் திறனையும் வினைத்திறனான செயற்பாடுகளையும் தேசிய மட்டத்தில் நிரூபித்துள்ளது.

இதற்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது கல்குடா கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் அவர்கள் குறித்த வெற்றிக்கிண்ணத்தையும் சான்றிதழையும் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.

கல்குடா கல்வி வலயத்தின் காத்திரமான நிர்வாகம், வினைத்திறனான செயற்பாடுகள், ஒருமித்த உழைப்பு, குழு ஒருங்கிணைப்பு மற்றும் அர்ப்பணிப்பான சேவை ஆகியவற்றுக்குக் கிடைத்த உன்னத தேசிய அங்கீகாரமாகவே இந்தச் சாதனை அமைந்துள்ளது.

இந்த வெற்றிக்குப் பின்னணியாகத் தூரநோக்குச் சிந்தனையுடனும் ஆளுமைமிக்க வழிகாட்டலுடனும் செயற்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் அவர்களுக்கும், வெற்றியை ஈட்டுவதற்காக அரும்பாடுபட்ட வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் தேசிய உற்பத்தித்திறன் இணைப்பாளருமான க. ஹரிகரராஜ் அவர்களுக்கும், உதவிக் கல்விப் பணிப்பாளரும் தேசிய உற்பத்தித்திறன் பொறுப்பு உத்தியோகத்தருமான திருமதி என். அகிலன் அவர்களுக்கும் பாராட்டுகள் உரித்தாகின்றன.

அத்துடன், இச்சாதனைக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஒட்டுமொத்தக் கல்விச் சமூகத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவிக்கப்படுகின்றன.

கல்குடா கல்வி வலயத்தின் இந்தத் தேசியச் சாதனை, கிழக்கு மாகாணக் கல்வித்துறைக்கும் பெருமை சேர்க்கும் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.