![]() |
EDITOR
இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மட்டக்களப்புக்கு வருகை தந்த உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் இராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவரான அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்கள், 2026 நவம்பர் 13ஆம் திகதி சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது, மாணவர்களால் தமிழ் கலாசார பாரம்பரிய முறைப்படி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, நிறுவக வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைக்கு சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் (Career Guidance Unit - CGU) ஏற்பாடு செய்யப்பட்ட "INSPIRE TO LEAD" (தலைமைத்துவத்திற்கு ஊக்கமளிப்போம்) எனும் தொனிப்பொருளிலான ஆன்மீக மற்றும் ஊக்கமளிக்கும் தலைமைத்துவ நிகழ்வு, அன்றைய தினம் நிறுவனத்தின் இராஜதுரை மண்டபத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பாரம்பரிய மாலை அணிவித்தலும் நடைபெற்றது.
தொடர்ந்து, பாரம்பரிய குத்துவிளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
கர்நாடக இசைத்துறை மாணவர்களின் பங்களிப்பில் சுவாமி விபுலானந்தர் பாடலுடன் பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நடனம், நாடகம் மற்றும் நாடகவியல் துறை மாணவர்களின் பங்களிப்பில் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பிளாரன்ஸ் பாரதி கென்னடி அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் இராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவரான அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்கள் ஆசியுரையை வழங்கினார்.
தொடர்ந்து, சுவாமி தக்ஷஜானந்தஜி மஹராஜ் அவர்கள், 'விவேகானந்தரின் எழுச்சி, ஆளுமை, சேவை' எனும் தலைப்பில் ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் ரெக்டர் பேராசிரியர் கே.டி. சுந்தரேசன் அவர்கள், 'விவேகானந்தர் வழியில் உயர்ந்த மனித உருவாக்கம்' எனும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் உரையை வழங்கினார்.
இந்த உரைகள் ஆன்மீகச் சிந்தனை, ஆளுமை மேம்பாடு, சமூக சேவை மற்றும் தலைமைத்துவப் பண்புகள் தொடர்பான கருத்துகளை மாணவர்களிடையே எடுத்துரைக்கும் வகையில் அமைந்தன.
சிறப்பு விருந்தினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பாராட்டு மற்றும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியாக, சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் துஷ்யந்தி ஜூலியன் ஜெயப்பிரகாஷ் அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தினார்.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆளுமை விருத்தி, ஆன்மீக விழுமியங்கள், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது.
இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெறும் ஆன்மீக மற்றும் கல்விசார் நிகழ்வுகளின் தொடரில், சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்திற்கான இவ்விஜயம் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாக அமைந்தது.




















































































