தமிழாக்கம்: அமிழ்தினி
சாவித்திரிபாய் ஏன் ‘இந்திய ஆங்கிலத்தின் தாய்’ என அழைக்கப்பட வேண்டும்? அவரது காலத்தில் வாழ்ந்த வேறு எந்தப் பெண்ணும் ஏன் இல்லை? ஏனெனில், இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு - எந்த பிராந்திய மொழிகளைக் காட்டிலும் - ஆங்கில மொழிக் கல்வியே மிகவும் துணை புரியும் என்று துணிச்சலுடன் கவிதை எழுதிய முதல் பெண் சாவித்திரிபாய் புலே ஆவார்.
மேலும், 172 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில மொழியை, இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு அவர் பயன்படுத்திய விதம்தான் இதற்குக் காரணம். முறையான கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் அவருக்குக் குறைவாக இருந்த காலத்திலேயே, ஆங்கில மொழியில் எழுத முன்வந்த பெண்ணாக அவர் விளங்கினார்.
சாவித்திரிபாயின் காலத்தில் பார்ப்பன அல்லது பனியா சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குக்கூட, ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் அனுமதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது.
அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டம் உள்பட, பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். பார்ப்பனிய ஒடுக்குமுறைச் சட்டங்களின் நூலாகக் கருதப்பட்ட மநுஸ்மிருதியை எரித்தார். ஆங்கிலத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க அம்பேத்கர் முயன்றார். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
1840 களிலிருந்தே புலே தம்பதியினர், பார்ப்பனியக் கட்டுப்பாட்டுக்கு எதிராகப் போராடினர். வங்காளத்திலும் தமிழ்நாட்டிலும் இருந்த பார்ப்பனர்களும் - உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்ட சமூகத்தினருக்கு - ஆங்கிலம் கற்கும் வாய்ப்பை மறுத்தனர்.
சாவித்திரிபாய் ஆங்கிலத்தைத் தாயாக அறிவித்ததும், சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினப் பெண்களும் ஆண்களும் ஆங்கிலத்தைக் கற்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்ததும், இந்தியாவில் ஆங்கில மொழியின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.
மனுவைப் பற்றி சாவித்திரிபாய் தனது கவிதையில் என்ன கூறுகிறார் என்பதைக் நாம் அனைவரும் கவனிக்க வேண்டும்.
‘ஆங்கிலத் தாயின் வாசலில் மநு இறந்துவிட்டான்.’
சாதியம் மற்றும் ஆணாதிக்கத்தில் இருந்தும் பெண்களையும் ஆண்களையும் விடுவிப்பதற்கான, சாவித்திரிபாயின் இந்தச் செய்தி, இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.





