மணிமண்டபத்திலிருந்து வி.ரி.சகாதேவராஜா& செய்தி ஆசிரியர்
இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவின் சிறப்பு பிரதான நிகழ்வு 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
கல்லடிஉப்போடை விபுலானந்தா ஞாபகார்த்த மணி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கைக்கான இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் கலந்து ஆசியுரை வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதியை தரிசித்தார்கள்.
பின்னர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதானமாக, நூற்றாண்டு அறிக்கை, காணொளி, நூற்றாண்டு மலர், முத்திரை, புத்தகங்கள் வெளியீடு மற்றும் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜின் ஆசியுரை என்பன இடம்பெற்றன.
சுவாமிகளுடன் கோணம்பட்டி இராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ, சிறப்புரையாற்றினார். ஊட்டி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா ஜீ உள்ளிட்ட பல துறவிகள் கலந்து சிறப்பித்தனர்.
அதிதிகளை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் தலைமையிலான துறவிகள் பக்தர்கள் பெருவரவேற்பளித்தனர்.
வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரெட்ணம் ,மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, 16ஆம் திகதி திங்கட்கிழமை சிவானந்தா வித்தியாலயத்தில் விஞ்ஞானானந்த பவன் திறப்பு, 17ஆம் திகதி மந்திர தீட்சை நிகழ்வு ராமகிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெறும்.
அதேவேளை நவம்பர் 20 ஆம் திகதி
கொட்டக்கலை சிவானந்தா நலன்புரி நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


























































































