போட்டிப் பரீட்சைகள் வைத்து பட்டதாரிகளைப் பணிகளுக்கு தெரிவது பட்டப்படிப்புகளின் குறைபாடா? பட்டதாரிகளின் குறைபாடா? பேராசிரியர். சி. ஜெயசங்கர்

 


 

 ந. சியாமினி

 

கல்வி என்றால் என்ன? பதில் கேட்டால் வரைவிலக்கணத்தை மட்டும் கூறும் மாணவர்களே அதிகம். உண்மையில் கல்வி என்பது என்ன? ஒருவர் வகுத்து வைத்த விடயங்களை அப்படியே மனப்பாடம் செய்து தாள்களிலே ஒப்புவிப்பதா? மாறாக ஒருவர் வகுத்து வைத்தவற்றை அறிந்த பின் அதனை தமது அனுபவம் மூலம் விளங்கிக் கொண்டு அதனை தம்முடையதான அறிவாக மாற்றிக் கொள்வதா?   கல்வி என்பது திரவம் போன்ற ஒன்றாக காணப்பட வேண்டும். அதற்கு இதுதான் வடிவம், இதுதான் கட்டமைப்பு என்று வகுக்கக் கூடாது. மாறாக கல்வியானது கொள்ளும் மனிதர்களின் அனுபவத்தை பொறுத்து அதன் பயன்பாடும் அமைய வேண்டும். 

 சமகாலத்தில் கல்வி எப்படி காணப்படுகிறது? உங்களால் கூற முடியுமா? என்னால் கூற முடியாது, காரணம் கல்வி என்பது நபர்களின் கைகளை பொறுத்து மாறுபட்டுக் கொண்டே செல்கின்றது. இதில் பிழை யாருடையது, என்னுடையதா? உங்களுடையதா?இல்லை நம்முடையது, காரணம் அதிகாரம் யார் கையில் உள்ளதோ அவருடைய அனுபவமே கல்வி நடவடிக்கைகளின் கட்டமைப்பில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகின்றது. ஆளுமைகள் என்று நாம் கூறுபவர்கள் யார்? எம்மைப் போல வாழ்ந்து, கல்வியை தமக்காணதாக மாற்றிக் கொண்டவர்கள். அவர்கள் கூறும் கல்வி முறையை நாமும் பின்பற்ற வேண்டும் என்பது எப்படி நியாயமானதாகும்? அவர்கள் வாழ்ந்த சூழலில் அவர்கள் வகுத்த கல்வி முறை சிறந்ததாக இருந்திருக்கலாம் அதனையே நாமும் பின்பற்றி கற்க வேண்டும் என்ற கட்டளை வகுப்பு எப்படி நியாயமானதாகும்?

 சாதாரணமாக ஒரு எடுத்துக்காட்டை நோக்குவோம்,இரண்டு ஓடு பாதைகள் இருக்கின்றது. இரண்டு ஓட்ட வீரர்கள் காணப்படுகின்றனர் ஒருவருடைய கையில் ஓடுபாதையின் வரைபடம் வழங்கப்பட்டு, இருவருமே ஒரே நேரத்தில் ஓட்டத்தை ஆரம்பிக்கின்றனர். ஆனால் ஓட்டம் முடிவடையும்போது இருவருமே ஒரே நேரத்தில் ஓட்டத்தை முடிக்கவில்லை காரணம் பாதையின் வரைபடம் வழங்கப்பட்ட ஓட்ட வீரன் வேகமாக ஓட்டத்தை நிறைவு செய்கின்றார். ஏன் இப்படி நடந்தது என்று கேட்டால் அனைவருமே இலகுவாக பதில் கூறி விடுவார்கள், ஓட்ட பாதையின் வரைபடம் இருந்ததால் அவர் விரைவாக ஓடினார் என்று ஆனால் இரண்டு பேரின் அனுபவமும் ஒன்றாக இருக்காது. விரைவாக வந்த ஓட்ட வீரனின் அனுபவம் என்பது தாமரை இலை மேல் தண்ணீர் போல மேலோட்டமானதாகவும், மற்ற ஓட்ட வீரனின் அனுபவம் என்பது ஒரு மரத்தின் ஆணிவேர் போல ஆழமானதாகவும் காணப்படும் அவன் கண்ட புதிய திருப்பங்கள், சவால்கள், அதனை எதிர்கொண்ட மனநிலை என்பன எப்போதும் அவன் மனதில் அழியாமல் நிலைத்து நிற்கும்.

 இப்படித்தான் கல்வி முறையும் புத்தகங்களை தந்து இதனை கற்று இப்படியே எழுது என்று கூறி பரீட்சையில் 100% புள்ளிகளை பெற்ற மாணவர்களே சிறந்த தகைமை உடையவர்கள் அவர்களுக்கே தொழிலில் முதல் நிலை என்றால் அது சிறந்ததா? சற்று சிந்தியுங்கள்...கல்வி எப்படி இருக்க வேண்டும் தாமரை இலை மேல் தண்ணீர் போலவா? மாறாக மரத்தின் ஆணிவேர் போலவா? சிந்தித்து செயல்படுங்கள் கல்வியின் உண்மையான மகத்துவத்தினை உலகறியச் செய்யுங்கள்.




ந. சியாமினி