நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

 



தமது தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியில் அரச சேவையில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) ஒருநாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமது பிரச்சினைகள் தொடர்பாகப் பல தடவைகள் உரிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்த போதிலும், இதுவரை சாதகமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச நிறுவனங்களின் அன்றாட நிர்வாகச் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அநுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சுகள், அரச திணைக்களங்கள், மாகாண சபைகள், கணக்குப் பிரிவுகள், காணிப் பிரிவுகள், ஆட்களைப் பதிவு செய்யும் அலுவலகங்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் உள்வாரிப் பணிகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் இன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காமையால் குறித்த நிறுவனங்களின் பல்வேறு நிர்வாக மற்றும் அலுவலகப் பணிகள் தாமதமடையக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன், மத்திய அரச சேவையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளன.

மொத்தமாக 12 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பின் ஏற்பாட்டிலேயே இன்றைய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அரச நிர்வாக அமைச்சர் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சருடனும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் இதைவிடத் தீவிரமான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.