தேசிய மட்ட மதிப்பீட்டில் சாதனை படைத்து மட்டக்களப்பு மண்ணுக்குப் பெருமை சேர்ப்பு- தேசிய வாசிப்பு மாத விருதை வென்றது சந்திவெளி பொது நூலகம்!

 








தேசிய வாசிப்பு மாதம் – ஒக்டோபர் 2025 நிகழ்வுகளை முன்னிட்டு, தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பொது நூலகங்களில் சந்திவெளி பொது நூலகம் தேசிய வாசிப்பு மாத விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையில் நடைபெற்ற கோலாகலமான விருது வழங்கும் நிகழ்வில், சந்திவெளி பொது நூலகத்தின் பொறுப்பாளர் திரு. ம. பிரகாஷ் அவர்கள் இத்தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.

வாசிப்பு ஊக்குவிப்பு, நூலகச் செயற்பாடுகளை விரிவுபடுத்துதல் மற்றும் சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளை முன்னெடுத்து வரும் சந்திவெளி பொது நூலகத்தின் இந்தச் சாதனை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வெற்றியானது நூலகத்தின் பொறுப்பாளர், நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் வாசகர் வட்டத்தினரின் கூட்டு முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சாதனையை முன்னிட்டு, சந்திவெளி பொது நூலகத்தின் பொறுப்பாளர் திரு. ம. பிரகாஷ், நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் வாசகர் வட்டத்தினர் அனைவருக்கும் கோறளைப்பற்று பிரதேச சபையின் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, அறிவார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் நூலகங்கள் ஆற்றும் பங்களிப்பை மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில் சந்திவெளி பொது நூலகத்தின் இந்தத் தேசிய விருதுச் சாதனை அமைந்துள்ளது.