இந்தியாவில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை மகளிர் அணிக்காக விளையாடி தனது அபார திறமையை வெளிப்படுத்திய யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த விமலேந்திரன் டிலக்சனா, ‘சிறந்த ரைடர்’ (Best Raider) விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த சம்பியன்ஷிப் தொடரின் லீக் சுற்றில் பங்களாதேஷ் மகளிர் அணியை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி 31–20 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றிக்கான ஆட்டத்தில் தனது வேகம், துல்லியமான நகர்வுகள் மற்றும் சிறப்பான ரைடிங் திறமையால் எதிரணிக்கு சவாலாக விளங்கிய டிலக்சனா, இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
போட்டியில் அவர் வெளிப்படுத்திய திறமையையும் சிறப்பான ஆட்டத்தையும் பாராட்டி, அவருக்கு ‘சிறந்த ரைடர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இளவாலை மண்ணிலிருந்து சர்வதேச கபடி அரங்குவரை தனது விளையாட்டுத் திறமையால் உயர்ந்து, இலங்கை தேசிய மகளிர் அணிக்குப் பெருமை சேர்த்துள்ள டிலக்சனாவின் இந்தச் சாதனை, யாழ்ப்பாணம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை விளையாட்டுத்துறைக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்துள்ளது.
சர்வதேச அரங்கில் தனது திறமையை நிரூபித்துள்ள இளம் வீராங்கனை விமலேந்திரன் டிலக்சனாவுக்கு மேலும் பல வெற்றிகளும் உயரிய விருதுகளும் கிடைக்க BATTIMEDIA தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.





