EDITOR
கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விசேட தேவையுடைய மாணவர்கள் பங்கேற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விசேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை வெளிக்கொணர்வதுடன், அவர்களின் தன்னம்பிக்கை, ஆளுமை வளர்ச்சி மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வளர்ச்சி, கற்றல் மற்றும் உடல்சார் சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களை உள்ளடக்கிய வகையில், 14 வகையான விசேட தேவைகளின் அடிப்படையில் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.
அந்தவகையில், ஆட்டிசம் நிறமாலைக் கோளாறு, உலகளாவிய வளர்ச்சித் தாமதம், அறிவுசார் இயலாமை, மூளைக் காயம், செவித்திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, பல்வகை மாற்றுத்திறன், டவுன் சிண்ட்ரோம் மற்றும் பிற மரபணுக் கோளாறுகள், எலும்பு மற்றும் தசை இயக்கக் குறைபாடுகள், குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள், உணர்ச்சி மற்றும் நடத்தை சார்ந்த குறைபாடுகள், பார்வை மற்றும் செவித்திறன் ஆகிய இரண்டிலும் குறைபாடுகள், பேச்சு அல்லது மொழிக் குறைபாடுகள் மற்றும் பிற உடல்சார் குறைபாடுகள் அல்லது தீவிர உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் பி. கார்த்திபன் கலந்து கொண்டதுடன், விசேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.எம். சுபகான் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், விசேட கல்விப் பிரிவின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்த விளையாட்டுப் போட்டியின் சிறப்பம்சமாக, தமது பிள்ளைகள் போட்டிகளில் பங்கேற்பதை ஆர்வத்துடனும் பெருமிதத்துடனும் அவதானித்த பெற்றோர்கள், அவர்களுக்கு ஆதரவாக அருகிலேயே இருந்து ஊக்கமளித்த காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
மாணவர்களின் ஒவ்வொரு முயற்சியையும் வெற்றியையும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் ரசித்ததுடன், அவர்களின் பங்கேற்பு இந்நிகழ்வுக்கு மேலும் உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தை அளித்தது.
போட்டிகள் நிறைவடைந்த பின்னர் மாலை வேளையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
தங்களது சவால்களையும் தடைகளையும் தாண்டி, ஆர்வம், விடாமுயற்சி மற்றும் அசாத்தியத் திறமையால் விளையாட்டரங்கில் சாதித்துக் காட்டிய அனைத்து மாணவர்களுக்கும் BATTIMEDIA தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அத்துடன், இம்மாணவர்களை அர்ப்பணிப்புடன் வழிநடத்திய ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பிள்ளைகளின் ஒவ்வொரு முயற்சிக்கும் துணைநின்ற பெற்றோர்களுக்கும் எமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாற்றுத்திறன்கள் தடைகளல்ல; திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளே முக்கியம் என்பதை இந்த விளையாட்டுப் போட்டி மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.


























































