மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு 2,000 தமிழ் நூல்கள் அன்பளிப்பு! – தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் கல்விசார் முன்னெடுப்பு

 

















































தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் ‘தன்வந்திரி – வாசி சுவாசி’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு பொது நூலகத்திற்காக 2,000 பெறுமதிமிக்க தமிழ் நூல்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவருமான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழக நிர்வாகிகளின் விசேட கோரிக்கைக்கு அமைவாக இந்த நூல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, தமிழ்நாடு ரோட்டரிக் கழக நிர்வாகிகளிடமிருந்து முதற்கட்டமாக சுமார் 2,000 பெறுமதிமிக்க தமிழ் நூல்களை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் அனுசரணையில் நூல்களைக் கையளிக்கும் நிகழ்வு, 05.11.2026 அன்று பிற்பகல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான வைத்தியர் கே.ஈ. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூல்கள் நூலக நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிக புத்தக உதவிகள் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களைத் தமிழ்நாடு ரோட்டரிக் கழகங்களின் ஊடாக முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

அத்துடன், இந்தியாவிலிருந்து வருகை தந்த ரோட்டரிக் கழகப் பிரதிநிதிகளுக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், மட்டக்களப்பில் தொழில்நுட்ப வளாகம் ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான செயற்திட்ட அறிக்கையும் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி வளர்ச்சியையும் அறிவுசார் ஆற்றலையும் மேம்படுத்தும் உன்னத நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாவல்கள், கவிதைகள், வரலாற்று நூல்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் ஆய்வு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த தமிழ் நூல்கள் நூலகப் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மாநகர சபை உறுப்பினர்கள், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் பிரபாகரன், மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ரோட்டரிக் கழகத்தின் தமிழ்நாடு சென்னை மாவட்ட முன்னாள் ஆளுநர் என்.எஸ். சரவணன், தன்வந்திரி செயற்றிட்டப் பிரதானி டி.ஆர். தனசேகர், சிறப்பு முன்னெடுப்புகளுக்கான பிரதானி எஸ். சாய்சேக்ஷன், ரோட்டரி வலயம் 5 தெற்காசிய உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர் ஜெகவண்ணன், நூலகப் பொறுப்பாளர், அலுவலகர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

வாசிப்பு என்பது அறிவை வளர்ப்பதுடன், சிந்தனையையும் ஆளுமையையும் செழுமைப்படுத்தும் வலிமையான கருவியாகும். அந்த வகையில், மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள 2,000 தமிழ் நூல்கள் எதிர்காலத் தலைமுறையின் அறிவுப் பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் ஒரு முக்கியமான பங்களிப்பாக அமைகின்றது.