குழந்தை ம.சண்முகலிங்கத்திடமும் ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகத்திடமும் நான் கண்ட ஒத்ததன்மை :





பேராசிரியர் சி.ஜெயசங்கர்.

  
குழந்தை ம. சண்முகலிங்கத்திற்கும் ஏட்டண்ணாவியார் செ. சிவநாயகத்திற்கும் இடையில் ஒரு பொதுத்தன்மையை நாம் காணலாம். குழந்தை ம.சண்முகலிங்கம் நவீன நாடகங்களுக்கான ஒரு நாடக ஆசிரியராக அமைய, ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகம் அவர்கள் கூத்துகளுக்கான எழுத்துப் பனுவல்களை உருவாக்குபவராக இருந்தார்.

குழந்தை ம. சண்முகலிங்கம் மாணவர்களுடன் உரையாடி, அந்த அனுபவங்களை உள்வாங்கி நாடகங்களை எழுதுவதை  அதாவது கல்வியியல் அரங்கில் நாடகங்களை எழுதுவதை  ஒரு புதிய பயில்வாகக் கொண்டு வந்தார். 

முதலாவது வரைவை எழுதுவதற்கு முன்னர், அம்மாணவர்களுடன் கலந்துரையாடி ஒரு அடிப்படையை அவர் பெற்றிருப்பார். பின்னர் எழுதப்பட்ட நாடகங்களை அப்பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டி, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கருத்துகளை உள்வாங்கி மீண்டும் திருத்தி எழுதுவார். 

இவ்வாறு மூன்று, நான்கு, ஐந்து தடவைகள் இந்த உரையாடல்களும் திருத்தி எழுதுதலும் நடந்து, எல்லோருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு வரும்பொழுது அந்த எழுத்துரு நிறைவு செய்யப்படும்.

இதைப்போலத்தான் ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகம் அவர்களும் செயற்பட்டார். 

கூத்து மீளுருவாக்கத்தில் ஒரு குழுநிலையிலான செயல்மையக் கலந்துரையாடல்களுக்கு ஊடாகப் பல்வேறு விடயங்கள் உரையாடப்பட்டு, புதிய கதையோட்டம் ஒன்று தீர்மானிக்கப்படும்பொழுது, அக்கூத்தை அவர் ஒவ்வொரு அலகாக எழுதுவார். அவ்வாறு எழுதிய ஒவ்வொரு அலகையும் மறுநாள் வாசித்துக் காட்டி, மீளக் கலந்துரையாடி, அவற்றில் திருத்தங்கள் செய்து அடுத்த அலகிற்குத் தயாராவது என்ற தொடர் செயன்முறைக்கூடாகவே இந்தக் கூத்து மீளுருவாக்க எழுத்துப் பனுவல்களும் எழுதப்பட்டன.

இவ்வாறே சிறுவர் கூத்துகளும் கலந்துரையாடி உருவாக்கப்பட்டன. ஏனென்று சொன்னால், மரபுவழிக் கூத்தில் சிறுவர் பாத்திரம் என்பது 'கட்டியக்காரன்' மட்டும்தான். 

நவீன நாடகத்தின் சிறுவர் அரங்க எண்ணக்கருவையும், கூத்தினுடைய 'சட்டம் கொடுத்தல்' முதல் 'வீட்டுக்கு வீடு ஆடுதல்' வரையிலான முழுமையான தொடர் செயற்பாட்டையும் இணைத்துச் சிறுவர் கூத்தரங்கை உருவாக்கியபொழுது, 

ஏற்கனவே இருக்கின்ற பல சிறுவர் கதைகள் பிற்போக்கானவையாக இருப்பதைக் கண்டோம். சிறுவர்களுக்குச் சொல்லப்படுகின்ற ஏமாற்றுதல், வழிப்பறி போன்ற விடயங்களைத் தவிர்த்து, முற்போக்கான கதைகளைக் கலந்துரையாடி எழுதுவது; 

மேலும், சிறுவர்கள் மத்தியில் பிரபல்யமான பிற்போக்குக் கதைகளைக் கலந்துரையாடி, அவற்றை முற்போக்குச் சிந்தனையும் ஆக்கபூர்வமான நோக்கமும் கொண்ட கதைகளாக வடிவமைத்து முன்வைக்கும்பொழுது, 

அதனை அவர் எழுத்துப் பனுவலாக எழுதி நிறைவு செய்வார். அந்த விடயங்களைப் பின்னர் மீண்டும் கலந்துரையாடி, நாங்கள் அந்தக் கூத்துப் பனுவலைப் பூர்த்தி செய்வோம்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு, செ. சிவநாயகம் அவர்கள் தனியாளாகவும் மிகவும் புதிய சிந்தனைகளுடன் கூத்துப் பனுவல்களை உருவாக்கினார். சமகாலப் பெண்ணிலைவாத நோக்கு, தலித்திய நோக்கு, சுற்றுச்சூழல் சார்ந்த பார்வை என இன்று உரையாடல்களில் இருக்கின்ற பல்வேறு முற்போக்கான, ஆக்கபூர்வமான சிந்தனைகளை உள்வாங்கி, கல்வியியல் அரங்கிற்கான கூத்துப் பனுவல்கள் மற்றும் சிறுவர் கூத்துகளுக்கான பனுவல்கள் என முழுக் கூத்துப் பனுவல்களை அவர் தனியாகவும் எழுதி முடித்துள்ளார். 

இது ஈழத்துக் கூத்துப் பனுவல் வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றமாகும்.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், இவர்கள் இருவருமே வயதில் மூத்தவர்களாக இருந்தாலும், மிக இளையவர்களிடம் இருந்தும் புதிய சிந்தனைகளை உள்வாங்கித் தங்களைத் தகவமைத்துக் கொண்டனர். 

இந்த ஆற்றல், நவீன அரங்கில் குழந்தை ம. சண்முகலிங்கத்திடமும், கூத்தரங்கில் செ. சிவநாயகத்திடமும் காணப்படுகின்ற, எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமானதொரு பண்பாகும்.

பேராசிரியர் சி. ஜெயசங்கர்,