- ‘மித்ர சக்தி XII – 2026’ மாதுருஓயாவில் ஆரம்பம்!
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் வருடாந்தம் நடத்தப்படும் கூட்டுப் போர் பயிற்சித் தொடரின் 12ஆவது கட்டமான ‘மித்ர சக்தி XII – 2026’ கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய இராணுவத்தினர் இன்று (13) மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கைக்கு வருகை தந்த 19 அதிகாரிகள் மற்றும் 150 படையினரைக் கொண்ட இந்திய இராணுவக் குழுவினரை, கேணல் நந்திக அபேசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மந்தீப் சிங் நேகி ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இக்கூட்டுப் பயிற்சியானது இன்று (13) முதல் 26ஆம் திகதி வரை மாதுருஓய இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெறவுள்ளது.
இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 17 அதிகாரிகள் மற்றும் 153 படையினர்கள் பங்கேற்கின்றனர். காலாட்படை, கவச வாகனப் படை, பீரங்கிப் படை, பொறியியல் படை, சமிக்ஞைப் படை, மருத்துவப் படை, இராணுவப் பொலிஸ் மற்றும் மகளிர் படையணி உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் இதில் அடங்குவர்.
இக்கூட்டுப் பயிற்சிக்கு இலங்கை விமானப்படையும் தனது பங்களிப்பை வழங்குகிறது. பயிற்சிக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் உட்பட 650 இற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2012இல் ஆரம்பிக்கப்பட்ட ‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி, இம்முறை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படுகிறது.
வான்வழி ஆதரவுடன் கூடிய கிளர்ச்சித் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தந்திரோபாய அனுபவப் பகிர்வில் விசேட கவனம் செலுத்தப்படும்.
இராணுவப் பயிற்சிகளுக்கு மேலதிகமாக, இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் நிறுவன ரீதியான விஜயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இக்கூட்டுப் பயிற்சியின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் திலுப பண்டார மேற்பார்வையில் நடைபெறுகின்றன.





