ஒரு காலில் நின்றவாறு தொடர்ந்து 50 யோகாசனங்கள்! – மாணவி சஞ்சனா சோழன் உலக சாதனை படைத்து அசத்தல்!

 











கோயம்புத்தூர்: இந்தியாவின் கோயம்புத்தூரைச் சேர்ந்த இளம் மாணவி சஞ்சனா, ஒரு காலில் நின்றவாறு இடைவிடாது தொடர்ந்து 50 வெவ்வேறு யோகாசனங்களைச் செய்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவரது இந்த அபார சாதனை, உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் பொதுத் தலைவர் பாலமுரளி கிருஷ்ணனின் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இந்தச் சாதனை முயற்சியை சஞ்சனா மேற்கொண்டுள்ளார்.

உடல் சமநிலை, மன ஒருமைப்பாடு மற்றும் யோகக் கலையில் தனக்குள்ள திறமையை வெளிப்படுத்தும் வகையில், எவ்வித இடைவேளையுமின்றி ஒரு காலில் நின்றவாறு தொடர்ந்து 50 வெவ்வேறு யோகாசனங்களை அவர் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்.

குறித்த சாதனை முயற்சியானது 2026 நவம்பர் 01ஆம் திகதி கோயம்புத்தூரில் அமைந்துள்ள BRAVE FIT ACADEMY இல் நடைபெற்றது.

இதன்போது, கோயம்புத்தூர் மாவட்ட சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் செயலாளர் திருமதி திலகவதி நேரடியாகக் கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட சாதனை விதிமுறைகள் மற்றும் அளவுகோல்களுக்கு அமைய சஞ்சனாவின் சாதனை முயற்சியை மதிப்பீடு செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வை கோயம்புத்தூர் மாவட்ட சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் பொதுத் தலைவர் பாலமுரளி கிருஷ்ணன் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார்.

சஞ்சனாவின் இந்த அபார சாதனையைப் பாராட்டி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தினால் உலக சாதனைக்கான சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கிண்ணம் மற்றும் உத்தியோகபூர்வ சாதனை ஆவணங்கள் உள்ளிட்ட கௌரவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இளம் வயதிலேயே இத்தகைய சாதனையை நிலைநாட்டியுள்ள சஞ்சனாவின் முயற்சி, இளம் தலைமுறையினரிடையே யோகக் கலையின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியம், மனவலிமை, கவனக்குவிப்பு மற்றும் முழுமையான நல்வாழ்வின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இளம் சாதனையாளர் சஞ்சனாவுக்கு சோழன் உலக சாதனைப் புத்தகம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்திலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து மேலும் உயரங்களை அடைய வாழ்த்தியுள்ளது.