கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலை பரபரப்பு! ஆடைக்குள் மறைத்து 436 கிராம் தங்கம் கடத்த முயன்ற இளம் ஆசிரியை கைது!

 



கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 2 கோடியே 45 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை ஆடைக்குள் மறைத்து நாட்டுக்குள் கடத்த முயன்ற 29 வயதுடைய இளம் பெண் ஒருவர் இன்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL-309 விமானம் மூலம் இன்று அதிகாலை 12 மணியளவில் குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டபோது, அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அவர் அணிந்திருந்த ஆடைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய பொதிகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவற்றைச் சோதனையிட்டபோது, 436 கிராம் எடையுடைய நான்கு முழுமையான தங்க பிஸ்கட்டுகளும், மற்றுமொரு தங்க பிஸ்கட்டின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய தனியார் பாடசாலை ஆசிரியை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த பெண்ணும் கைப்பற்றப்பட்ட தங்கமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் முடிவில், குறித்த பெண்ணுக்கு 25 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தங்கக் கடத்தல் முயற்சியின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.