பிரித்தானியாவில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘Travel & Taste Awards 2026’ விருது விழாவில், ‘ஆண்டின் அதிசொகுசு உணவு சுற்றுலா இலக்கு’ (Luxury Culinary Destination of the Year) என்ற சர்வதேச விருது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற உலகப் பயணச் சந்தையின் (World Travel Market) சர்வதேச சுற்றுலாக் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு அரங்கில் வைத்து இந்த விருது உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
‘Travel & Taste Awards’ அமைப்பின் பிரதம ஏற்பாட்டாளரான அலெக்ஸ் க்ரொஸ்லி (Alex Crossley) இந்த விருதினை வழங்கியதுடன், இலங்கை சார்பில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க அதனைப் பெற்றுக்கொண்டார்.
உலகளாவிய ரீதியில் உணவு சார்ந்த சுற்றுலா அனுபவங்கள் மற்றும் முன்னணி சுற்றுலா இலக்குகளை 17 வெவ்வேறு விருதுப் பிரிவுகளின் கீழ் கௌரவிக்கும் முக்கிய சர்வதேச விருது விழாவாக ‘Travel & Taste Awards’ திகழ்கின்றது.
சர்வதேச உணவு மற்றும் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த முன்னணி நிபுணர்களைக் கொண்ட நடுவர் குழுவினால், இந்த விருதுக்கான வெற்றியாளர்கள் மிக நுணுக்கமான மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடுவர் குழுவில் மதுபானத்துறை நிபுணர் மில்லி மில்லிகன்-ஹோல்ட்ஹாம், உணவு சுற்றுலா உள்ளடக்க உருவாக்குநரான வெர்னா காவ், விருந்தோம்பல் துறை நிபுணர்களான ஜினா ஜக்சன் மற்றும் மில்லி கென்னி-ரைடர் உள்ளிட்ட சர்வதேசப் புகழ்பெற்ற வல்லுநர்கள் அங்கம் வகித்துள்ளனர்.
இலங்கையின் சுற்றுலாத்துறையில் சொகுசு அனுபவங்களை மேம்படுத்தும் வகையில் உருவாகி வரும் புதிய பூட்டிக் ஹோட்டல்கள், நாட்டின் செழுமையான சமையல் கலாசாரம் மற்றும் தனித்துவமான உள்ளூர் இயற்கை விளைபொருட்களின் பயன்பாடு ஆகிய அம்சங்களை நடுவர் குழு விசேடமாகக் கவனத்தில் கொண்டுள்ளது.
மேலும், இலங்கையின் பாரம்பரிய மற்றும் நவீன உணவு வகைகளில் காணப்படும் பன்முகத்தன்மை, தனித்துவமான நறுமணமும் சுவையும் கொண்ட உணவு வகைகள் மற்றும் உயர்தர உணவு அனுபவங்கள் ஆகியனவும் இந்த சர்வதேச அங்கீகாரத்திற்கான முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
இந்த சர்வதேசக் கௌரவத்தின் ஊடாக, உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சொகுசு உணவு மற்றும் சுற்றுலாத்துறை இலக்குகளில் ஒன்றாக இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் அதிகரிக்க முடியும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் உணவுக் கலாசாரம், இயற்கை வளங்கள் மற்றும் விருந்தோம்பல் பண்பாட்டுக்கு சர்வதேச அரங்கில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.





