இலங்கையில் அடுத்த ஆண்டு அரச சேவைக்கு 121,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் போட்டிப் பரீட்சை ஊடாகவே அரச சேவைக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற தொழிற்சங்க தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவைக்கு நியமனங்களை வழங்கவேண்டும் என்பதற்காக தொகை கணக்கில் வழங்க முடியாது. கடந்த காலங்களில் அவ்வாறு வழங்கப்பட்டதால் தான் அரச சேவையில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
ஏதேனும் பதவிக்கு நியமிக்கப்படும் நபர் அந்த துறைசார்ந்த தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும். போட்டிப் பரீட்சை ஊடாகவே அரச சேவைக்கு நியமனங்கள் வழங்கப்படும்.
அப்போதுதான் அரச சேவை வினைத்திறனாக அமையும். மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க முடியும். அதனை விடுத்து நியமனம் வழங்கவேண்டும் என்பதற்காக வெற்றிடங்களை நிரப்ப முடியாது.
அரச சேவையில் முழுமையான சம்பள அதிகரிப்பை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் அத்தியாவசிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும். அதேபோல் ஏனைய கொடுப்பனவுகளும் முழுமையாக அதிகரிக்கப்படும்.
அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பை போன்று தனியார் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.





