மட்டக்களப்பு, குழுவினமடு அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் ஆன்மிகப் பெருமையையும், தொன்மையான பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலயப் பக்திப் பாமாலை” இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் ஆன்மிகச் சிறப்புகளையும், விநாயகப் பெருமானின் திருவருட் பெருமைகளையும் இசை மற்றும் இலக்கிய நயத்துடன் வெளிப்படுத்தும் வகையில் இப்பக்திப் பாமாலைப் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரக் கலைச்சுடர், முத்தமிழ்க் காவலர் சிவஸ்ரீ தேவ சுகிர்தராஜ் ஐயா பாடல்களை இயற்றி, பாடியுள்ளதுடன், இசையமைப்புப் பணிகளை நவற்குடா JS AUDIOLAP நிறுவனத்தைச் சேர்ந்த திரு. கு. யூட் நிரோசன் மேற்கொண்டுள்ளார்.
இறுவட்டில் இடம்பெறும் பாடல்களுக்கு திரு. கு. யூட் பிரியதர்சன், செல்வி உ. மிதுஷானியா மற்றும் திருமதி துஷானி அருணன் ஆகியோர் பின்னணி இசைக் குரல் வழங்கியுள்ளனர்.
நாதஸ்வரம் மற்றும் வீணை இசைப் பங்களிப்பை S. வரதராஜன் மற்றும் S. டிலோதர்ஷன் ஆகியோர் வழங்கியுள்ளனர்.
இவ்வெளியீட்டுப் பணிக்கு திரு. யோ. கமல், திரு. வ. அகிலேஸ்வரன் மற்றும் திரு. க. பிரவா ஆகியோர் அனுசரணை வழங்கியுள்ளனர்.
வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 10.11.2026 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு குழுவினமடு அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளதுடன், ஆலய பரிபாலன சபையினர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.
இறையருள் போற்றும் இந்நிகழ்வில் ஆன்மிகப் பற்றாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பக்த அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.





