கிழக்கு மாகாணத்தில் உள்ள சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு புதிய சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அவர்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை பரந்த சந்தைக்கு அறிமுகப்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அறிமுகப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Batticaloa Expo 2026) இன்று ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 04 ஆம் திகதி வரை (4 நாட்கள்) மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் (Sivananda National School Grounds) நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இந்நிகழ்விற்கான பூரண ஆதரவை வழங்குவதுடன், மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அவர்களது தலைமையில் இடம் பெற்ற இக் கண்காட்சியின் முதல் நாள் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி அவர்களும் விசேட அதிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபா் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், அமைச்சின் இணைப்பாளர் கே.திலகநாதன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றம் Event Max Exhibitions நிறுவனத்தின் முகாமையாளர் பிரசாத் பெரேரா, Tima international (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டிரோன் லியனகமகே, மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் மீயுயர்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், அனுசரனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மூன்றாவது தடவையாக Event Max Exhibitions நிறுவனம், Tima international (Pvt) Ltd நிறுவனம் ஆகியன இணைந்து மட்டக்களப்பில் பிரமாண்டமான இந்த வர்த்தக கண்காட்சியை ஏற்பாடு செய்து நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.



















